ஹோமாகம கைத்தொழில் பேட்டையில் உள்ள ஹெல்மெட் உற்பத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் தீக்காயமடைந்து உயிரிழந்த 05 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீயை அணைத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. தீ விபத்தினால் தப்பிக்க முடியாமல் சிக்கிக்கொண்ட 5 தொழிற்சாலை ஊழியர்கள் இவ்வாறு உயிரிழந்திருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது.
கட்டுவான கைத்தொழில் பேட்டையில் உள்ள ஒரு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தீயை அணைத்த பின்னர், இடிபாடுகளுக்கு மத்தியில் தேடுதல் நடவடிக்கைகள் தற்போது மேலும் இடம்பெற்று வருகின்றன. கட்டுவான கைத்தொழில் பேட்டையில் உள்ள ஹெல்மெட் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் இன்று (21) காலை ஏற்பட்ட இந்த தீ விபத்தை கட்டுப்படுத்த 08 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாக தீயணைப்பு சேவைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.