பொரலஸ்கமுவ, கட்டுவாவல பிரதேசத்தில் உள்ள ஒரு வீட்டிலிருந்து எண்பத்து மூன்று இலட்சத்து பத்தாயிரம் ரூபாய் பெறுமதியான 15 பவுன்களுக்கும் அதிகமான தங்க நகைகள் மற்றும் பதினொரு இலட்சத்து முப்பத்து மூவாயிரம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு நாணயக் கையிருப்பு ஆகியவற்றை அவ்வப்போது திருடிய வீட்டுப் பணிப்பெண்ணும், அந்த தங்க நகைகளை வாங்கிய கடை உரிமையாளரும் பொரலஸ்கமுவ பொலிஸாரால் கடந்த 30ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளனர். நீண்ட காலமாக இந்தத் திருட்டு நடந்துள்ளது என்பதை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேகநபர் கிரிஉல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதுடைய பெண் ஆவார். இவர் இதற்கு முன்னர் 15 வருடங்கள் துபாய் நாட்டிலும், 3 வருடங்கள் குவைத் நாட்டிலும் வீட்டுப் பணிப்பெண்ணாகப் பணிபுரிந்து இலங்கைக்கு வந்துள்ளார். திருட்டு நடந்த வீட்டில் சுமார் 6 வருடங்களாக பணிபுரிந்து வந்துள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். திருடப்பட்ட தங்க நகைகளை வாங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கடை உரிமையாளர் நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடையவர் ஆவார்.
வீட்டில் இருந்த தங்க நகைகளும் பணமும் அடிக்கடி காணாமல் போவதைக் கவனித்த வீட்டு உரிமையாளர்கள் இது குறித்து பொரலஸ்கமுவ பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். அதற்கமைய செயற்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் திமுத்து ரத்நாயக்க உள்ளிட்ட பொலிஸ் குழுவினர், சந்தேகநபரின் தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகள் மூலம் விரிவான விசாரணையை ஆரம்பித்துள்ளனர். அப்போது அவர் கிரிஉல்ல பிரதேசத்தில் உள்ள தனது வீட்டில் தங்கியிருப்பதை அடையாளம் கண்டு அங்கு சென்று சந்தேகநபரை கைது செய்ய பொலிஸார் வெற்றி பெற்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்படி, அவரது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நாற்பத்தைந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளின் ஒரு பகுதியும், நான்கு இலட்சத்து முப்பதாயிரம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு நாணயமும் பொலிஸ் பொறுப்பில் எடுக்க முடிந்துள்ளது. திருடப்பட்ட எஞ்சிய தங்க நகைகள் நீர்கொழும்பு பிரதேசத்தில் உள்ள ஒரு தங்க நகை விற்பனை நிலையத்திற்கு விற்கப்பட்டுள்ளன. அந்த கடை உரிமையாளர் அவற்றை உருக்கி குருநாகல் பிரதேசத்தில் உள்ள வேறொரு கடைக்கு விற்றுள்ளார் என்பதும் பொலிஸ் விசாரணைகளில் மேலும் தெரியவந்துள்ளது.