குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் விசேட பயிற்சி பெற்ற, நெதர்லாந்தில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 'லூசி' என்ற பொலிஸ் மோப்ப நாய், கண்டி அஸ்கிரிய பொலிஸ் மோப்ப நாய் பிரிவில் எட்டு குட்டிகளை ஈன்றுள்ளது. அஸ்கிரிய பொலிஸ் மோப்ப நாய் பிரிவில் ஒரு நாய் ஒரே நேரத்தில் எட்டு குட்டிகளை ஈன்றது அண்மைய வரலாற்றில் இதுவே முதல் தடவையாகும். இது லூசியின் முதல் பிரசவமும் ஆகும்.
இந்த பிரசவத்தில், ஐந்து பெண் குட்டிகளையும் மூன்று ஆண் குட்டிகளையும் ஈன்றெடுத்ததாகவும், அனைத்து குட்டிகளும் மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் பொலிஸ் மோப்ப நாய் பிரிவின் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார். இந்த புதிய நாய்க்குட்டிகளுக்கு ஆறு மாதங்கள் நிறைவடைந்ததும், குற்றவாளிகளைப் பிடிப்பது, போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பது மற்றும் வெடிபொருட்களைக் கண்டுபிடிப்பது போன்ற சிறப்புப் பணிகளுக்கான முறையான பயிற்சியை வழங்குவதற்கு அதிகாரிகள் ஏற்கனவே ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.
தற்போது தனது குட்டிகளை மிகுந்த பாசத்துடன் பராமரித்து வரும் லூசிக்கு, அவர்களுடன் நேரத்தைச் செலவிடுவதற்காக அடுத்த இரண்டு மாதங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த காலப்பகுதியில் அவள் குற்றப் புலனாய்வு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட மாட்டாள். இரண்டு மாதங்கள் முடிந்த பிறகு, அவளுக்கு மீண்டும் விசேட பயிற்சி அளிக்கப்பட்டு, வழமையான கடமைகளுக்கு நியமிக்கப்படுவாள்.
கடந்த 2024 ஆம் ஆண்டு நெதர்லாந்தில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 35 நாய்கள் கொண்ட குழுவில் இந்த லூசி நாயும் அடங்கும். தற்போது தனது குட்டிகள் மீது கடுமையான பாதுகாப்பு கொள்கையை கடைபிடிக்கும் அவள், உதவி பொலிஸ் அத்தியட்சகர் கால்நடை வைத்தியர் அமல் தஸநாயக்க, கால்நடை வைத்தியப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் திலகரத்ன மற்றும் அவளைக் கையாளும் பொலிஸ் கான்ஸ்டபிள் தினிந்து குமார (104983) ஆகியோரைத் தவிர வேறு எந்த பொலிஸ் அதிகாரியையும் குட்டிகள் இருக்கும் இடத்திற்கு செல்ல அனுமதிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.