அக்குரேகொட பிரதேசத்தில் வழக்கறிஞர் ஒருவரையும் அவரது மனைவியையும் சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர் மாலைதீவில் இருந்து நாட்டிற்கு வந்தபோது கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 23 வயதான இந்த சந்தேகநபர் குற்றப் புலனாய்வுப் பிரிவின் (CID) அதிகாரிகளால் கடந்த வெள்ளிக்கிழமை (04) கைது செய்யப்பட்டதாகவும், மேலதிக விசாரணைகளுக்காக அவர் மேல் மாகாண தென் குற்றப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
எட்கந்துர பிரதேசத்தைச் சேர்ந்த இந்த சந்தேகநபர், 2026 பெப்ரவரி 13 அன்று தலங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்குரேகொட பிரதேசத்தில் வழக்கறிஞரையும் அவரது மனைவியையும் சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடையவர் என பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவர். அவர் நாட்டிற்கு வந்தபோது எளிதாக அடையாளம் கண்டு கைது செய்வதற்காக சந்தேகநபரின் தகவல்கள் விமான நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள தானியங்கி முக அடையாளம் காணும் அமைப்பு (Automated Facial Recognition System) இல் உள்ளிடப்பட்டிருந்ததாக பொலிஸ் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்த சந்தேகநபர் இதற்கு முன்னரும் சட்டவிரோத போதைப்பொருள் வைத்திருந்த குற்றங்களுக்காக பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது. அதன்படி, 2025 அக்டோபரில் சட்டவிரோத போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக பத்தேகம பொலிஸாராலும், 2025 டிசம்பரில் ஹெரோயின் வைத்திருந்த குற்றத்திற்காக எம்பிலிபிட்டிய பொலிஸாராலும் அவர் கைது செய்யப்பட்டார். இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அபராதம் விதிக்கப்பட்டார். இந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேல் மாகாண தென் குற்றப் பிரிவினால் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.