
கின் ஆற்றில் மிதந்து கொண்டிருந்தபோது கண்டுபிடிக்கப்பட்ட விராஜ் ரஷ்மிகா டி சில்வா என்பவரின் மரணம் தொடர்பாக, ஒரு உதவி பொலிஸ் அத்தியட்சகர் உட்பட ஒரு குழு அதிகாரிகள் மீது பொய்யான கொலைக் குற்றச்சாட்டுகளை சுமத்த முயற்சித்த சம்பவம் தொடர்பில், கரந்தெனிய பொலிஸ் நிலையத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பொலிஸ் பரிசோதகரின் கடமைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. பொலிஸின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டமை உட்பட பல ஒழுக்கமற்ற செயல்களை அடிப்படையாகக் கொண்டு ஜூலை 19 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வசந்த கித்ஸிரி ஜயலத் அவர்களின் பணிப்புரையின் பேரில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணையைத் தொடர்ந்து, மாத்தறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் காரியவசம் அவர்களால் இந்த இடைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த மரணம் காலி குற்றப் பிரிவின் பதில் பணிப்பாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நாமல் பெரேரா மற்றும் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது என்று உணர்த்தும் வகையில் கடந்த மே 28 ஆம் திகதி கரந்தெனிய பொலிஸ் நிலையத்தின் தகவல் பதிவேடுகளில் பொய்யான பதிவுகளை இட்டமை, பாரிய குற்றங்களை தீர்ப்பதை புறக்கணித்தமை மற்றும் தேவையற்ற விடயங்களை பொலிஸ் பதிவேடுகளில் சேர்த்தமை தொடர்பில் குறித்த பொலிஸ் பரிசோதகருக்கு எதிராக முறையான விசாரணை நடத்துமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கின் ஆற்றில் கண்டுபிடிக்கப்பட்ட சடலத்திற்கு காலி மாவட்ட குற்றப் பிரிவின் அதிகாரிகள் பொறுப்பு என்று உணர்த்தும் வகையில் ஒருவரின் முகநூல் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிடப்பட்டிருந்தது. அதில் காலி மாவட்ட குற்றப் பிரிவின் வளாகத்தில் உள்ள சுவரில் உடைந்த தூணின் ஒரு பகுதியும், உணவகத்தின் உள்ளே பொருட்கள் வைக்கும் அறையின் புகைப்படங்களும் உள்ளடங்கியிருந்தன. இந்த புகைப்படங்கள், குறித்த பொலிஸ் பரிசோதகரின் கோரிக்கையின் பேரில் காலி மாவட்ட குற்றப் பிரிவின் சமையல்காரர் ஒருவரால் மொபைல் தொலைபேசியில் எடுக்கப்பட்டு, வாட்ஸ்அப் (WhatsApp) தொழில்நுட்பம் மூலம் அவருக்கு அனுப்பப்பட்டதாக விசாரணைகளில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தகவல்கள் வெளியானதும், பொறுப்பதிகாரியின் கடமைகளை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வசந்த கித்ஸிரி ஜயலத் அவர்களின் பணிப்புரையின் பேரில், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லக்கி ரந்தெனிய அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.