
சிறைச்சாலைகளில் ஏற்படும் பல்வேறு மோதல் சூழ்நிலைகளைத் தடுக்கும் நோக்கில், கைதிகளின் நடத்தைகளை நுட்பமாக அவதானித்து அறிக்கை செய்ய ஆயிரத்திற்கும் மேற்பட்ட புலனாய்வு அதிகாரிகள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். கைதிகளின் வன்முறைச் செயல்கள், அவர்கள் ஏற்பாடு செய்யும் சதித்திட்டங்கள் மற்றும் வெளியிலுள்ள பாதாள உலகக் குழுக்களுடன் அவர்கள் பேணும் தொடர்புகள் குறித்து விசாரித்து தகவல்களை வழங்குவதே இந்த புலனாய்வுக் குழுக்களின் முக்கிய பணியாகும்.
இது தவிர, சிறைச்சாலைகளுக்குள் கைதிகள் குழுக்களாகச் சேர்வதைத் தடுக்கும் நடவடிக்கையாக, ஒரே இடத்தில் நீண்ட காலம் வைத்திருக்காமல், அவர்களை அவ்வப்போது வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றுவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. நீதி அமைச்சும் சிறைச்சாலைகள் திணைக்களமும் தெரிவித்துள்ளபடி, தற்போது நாட்டின் சிறைச்சாலை அமைப்பில் சுமார் 42,000 கைதிகள் உள்ளனர், அவர்களில் கடுமையான குற்றங்கள் உட்பட பல்வேறு காரணங்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட 817 க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர்.
சிறைச்சாலைகளுக்குள் இருந்து பல்வேறு முறைகேடுகளையும் சதித்திட்டங்களையும் இயக்கும் பாதாள உலகக் குற்றவாளிகள் மீது கடும் கவனம் செலுத்துமாறு அரசாங்கம் புலனாய்வுப் பிரிவுகளுக்கு மேலும் அறிவுறுத்தியுள்ளது. இதற்கிடையில், சிறைச்சாலைகளில் நிலவும் அதிக நெரிசலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலைகள் ஆணையாளருமான அநுருத்த கஜநாயக்க தெரிவித்தார்.