பொரலஸ்கமுவ, ஓ. பி. பெரேரா மாவத்தையில் அமைந்துள்ள ஒரு வீட்டிற்குள் புகுந்து கூரிய ஆயுதங்களால் தாக்கி தப்பிச் செல்ல முயன்ற ஆயுததாரிகளை கைது செய்ய முயன்றபோது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்தவர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான 'கொஸ் மல்லி' என்பவரின் ஆதரவாளர் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
போதைப்பொருள் தொடர்பான தகராறு காரணமாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், துப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில் அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழ்நிலை நிலவியது.நேற்று (19) அதிகாலை 1.30 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த குழுவினர், குறித்த வீட்டில் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தவர்களையும் சொத்துக்களையும் கூரிய ஆயுதங்களால் கடுமையாக சேதப்படுத்தியுள்ளனர். இந்தத் தாக்குதல் தொடர்பாக பொரலஸ்கமுவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி, சந்தேகநபர்கள் பிலியந்தலை நோக்கி தப்பிச் செல்வதாக அறிந்ததும் அதிகாரிகள் அந்த வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது முன்னால் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று திரும்பிச் செல்ல முயன்றபோது, அதன் ஓட்டுநர் ஒரு பொலிஸ் அதிகாரியை மோதி விபத்துக்குள்ளாக்கியுள்ளார். பின்னர் பின்னால் வந்தவர் கூரிய ஆயுதத்தால் தாக்க முயன்றபோது, செயல்பட்ட ஒரு அதிகாரி தனது உத்தியோகபூர்வ துப்பாக்கியால் சுட்டுள்ளார். தாக்குதலில் காயமடைந்தவர் மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே விழுந்துள்ளார்.
அப்போது மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற சந்தேகநபர் துப்பாக்கிச் சூட்டிற்கு மத்தியில் தப்பிச் சென்றுள்ளார். பின்னர், குறித்த மோட்டார் சைக்கிள் பிலியந்தலை, கொஸ்கனத்த வீதிப் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தத் தாக்குதலில் காயமடைந்த 24 வயது யுவதி, விபத்துக்குள்ளான பொலிஸ் அதிகாரி மற்றும் பண்டாரகம பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபர் ஆகியோர் மேலதிக சிகிச்சைக்காக களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக பொரலஸ்கமுவ மற்றும் பிலியந்தலை பொலிஸ் நிலையங்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.