வத்திக்கானின் ஒப்புதல் இல்லாமல் புதிய ஆயர்களை நியமிக்க தீவிர பழமைவாத கத்தோலிக்க குழு ஒன்று எடுத்துள்ள முடிவை கைவிடுமாறு போப் ஆண்டவர் அவர்களிடம் கடுமையாக வலியுறுத்தியுள்ளார். 'சொசைட்டி ஆஃப் செயின்ட் பியஸ் X' (SSPX) எனப்படும் இந்தக் கிளர்ச்சிக் குழு, தனது குருத்துவக் கல்லூரியில் நான்கு புதிய ஆயர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம் பதவியேற்ற, கத்தோலிக்க திருச்சபையின் ஒற்றுமைக்கு முன்னுரிமை அளிக்கும் அமெரிக்க போப் ஆண்டவருக்கு இது ஒரு பெரிய சவாலாக அமைந்துள்ளதுடன், இந்தச் செயல் பாரம்பரிய வலதுசாரி கத்தோலிக்கர்களுடனான உறவுகளை மேலும் சேதப்படுத்தக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.கத்தோலிக்க திருச்சபையின் தாராளவாத சீர்திருத்தங்களை எதிர்த்து, 1970 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தின் எக்கோன் கிராமத்தில் இந்த SSPX அமைப்பு நிறுவப்பட்டது. சுமார் 1,500 உறுப்பினர்களைக் கொண்ட இந்தக் குழு, 1962 மற்றும் 1965 க்கு இடையில் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டாம் வத்திக்கான் பேரவையின் சீர்திருத்தங்களை கடுமையாக நிராகரிக்கிறது. லத்தீன் மொழியில் மட்டுமே நடத்தப்பட்ட வழிபாடுகளை பிராந்திய மொழிகளில் நடத்த அனுமதிப்பது உட்பட மாற்றங்களை அவர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர். நவீன தேவாலயங்களில் மதவெறி மற்றும் தவறான செயல்கள் இருப்பதாகக் கூறும் அவர்கள், இந்த ஆயர் நியமனங்கள் வெறும் நடைமுறைத் தேவையின் அடிப்படையில் செய்யப்படுவதாகவும், திருச்சபைக்குள் ஒரு தனி அதிகாரத்தை நிறுவுவது இதன் நோக்கம் அல்ல என்றும் அறிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும், திருச்சபைச் சட்டத்தின்படி, இத்தகைய நியமனங்கள் கத்தோலிக்க திருச்சபையின் ஒற்றுமையை சீர்குலைக்கும் பிளவுபடுத்தும் செயலாகக் கருதப்படுகின்றன, மேலும் இதில் ஈடுபடும் புதிய ஆயர்களும், இந்த நியமனங்களைச் செய்யும் ஆயரும் தானாகவே திருச்சபையிலிருந்து நீக்கப்படுவார்கள். போப் லியோ XIV, SSPX அமைப்பின் தலைவர் வணக்கத்திற்குரிய டேவிட் பக்லியாரானிக்கு ஒரு கடிதம் அனுப்பி, இந்தச் செயலால் விசுவாசிகளின் ஆன்மீக நலனுக்கு ஏற்படும் பாதிப்பைக் கருத்தில் கொண்டு அந்த முடிவை கைவிடுமாறு முழு மனதுடன் கேட்டுக்கொண்டார். மேலும், கிறிஸ்துவின் திருச்சபையின் ஒற்றுமையை சீர்குலைப்பது ஒரு கடுமையான பாவம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இந்தக் குழு தொடர்ந்து பிளவுபடுத்தும் வகையில் செயல்பட்டால், வருத்தத்துடன் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என்றும் போப் ஆண்டவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
போப் ஆண்டவரின் இந்த கோரிக்கையை நிராகரித்த SSPX அமைப்பின் ஊடக மேலாளர் மார்க்-ஆண்ட்ரே மேபிலார்ட், அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்திடம் தங்கள் திட்டங்களில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்று தெரிவித்தார். தங்கள் தலைவர் தங்களைப் புரிந்துகொள்ளாதது வருத்தமளிக்கிறது, ஆனால் தாங்கள் எதிர்பார்க்கும் நன்மை அதனால் ஏற்படும் வலியை விட பெரியது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். இதற்கிடையில், ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தின் மூத்த உறுப்பினரும் எழுத்தாளருமான கிறிஸ்டோபர் வைட், திருச்சபையிலிருந்து நீக்கப்படுவதன் விளைவுகள் குறித்து தெளிவாகக் குறிப்பிட்டிருப்பது நிலைமையின் தீவிரத்தை உறுதிப்படுத்துகிறது என்றும், போலி ஒற்றுமைக்காக இத்தகைய தன்னிச்சையான நடத்தைகளை போப் ஆண்டவர் கண்டுகொள்ள மாட்டார் என்றும் சுட்டிக்காட்டினார்.