
மோட்டார் வாகனத்தால் இரண்டு யுவதிகளை மோதிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற ஹோமாகம சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவின் விசேட விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி மீகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பிரதான பொலிஸ் பரிசோதகரான இந்த சந்தேகநபர் நேற்று (25) இரவு இரண்டு இடங்களில் இந்த விபத்துக்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் தகவல்களின்படி, முதல் விபத்து ஹைலெவல் வீதியில் மீகொட எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகிலும், இரண்டாவது விபத்து வட்டரக்க 20 ஆம் கட்டை பகுதியிலும் இடம்பெற்றுள்ளது. நேற்று இரவு 11.30 மணிக்கும் 11.57 மணிக்கும் இடையில் இந்த இரண்டு விபத்துக்களையும் ஏற்படுத்தி யுவதிகளை விபத்துக்குள்ளாக்கி சந்தேகநபர் மோட்டார் வாகனத்தை ஓட்டிச் சென்று தப்பிச் சென்றுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில், சந்தேகநபரான பிரதான பொலிஸ் பரிசோதகர் அதிக மதுபோதையில் மோட்டார் வாகனத்தை செலுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபரை ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.