தெவிநுவர வரலாற்று சிறப்புமிக்க உத்பலவண்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் 769வது வருடாந்த எசல மகா பெரஹர விழாவில் எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவிருந்த காவடி நடன நிகழ்வை தற்காலிகமாக நீக்குவதற்கு பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய பரிந்துரைத்துள்ளார். ஜூலை 25ஆம் திகதியிடப்பட்ட கடிதம் மூலம் பொலிஸ்மா அதிபரால் செய்யப்பட்ட இந்த உத்தியோகபூர்வ எழுத்துப்பூர்வ அறிவித்தலுக்கு அமைய செயற்பட்ட மாத்தறை மாவட்ட செயலாளர் சந்தன திலகரத்ன, சம்பந்தப்பட்ட காவடி ஊர்வல நிகழ்வை நீக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே அரச்சிகே திலின மதுசங்கவுக்கு அறிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் தேசிய புலனாய்வுத் தலைவர், அரச புலனாய்வு சேவை, பொலிஸ் விசேட பணியகம் மற்றும் தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் வழங்கிய புலனாய்வு மதிப்பீட்டு அறிக்கைகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இம்முறை காவடி குழுக்களைத் தேர்ந்தெடுக்கும்போது 'தெஹி பால மல்லி' மற்றும் 'ஊணகுருவே சாந்த' ஆகிய இரண்டு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களின் தரப்பினரிடையே கடுமையான சர்ச்சைக்குரிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பெரஹர காலத்தில் ஒழுக்கமற்ற முறையில் நடந்துகொண்ட சில காவடி குழுக்களை நீக்க நிர்வாகம் நடவடிக்கை எடுத்ததையடுத்து இந்த பதற்றமான நிலைமை மேலும் தீவிரமடைந்துள்ளது. இம்முறை காவடி நடனங்களுக்காக 47 குழுக்கள் முன்வந்திருந்த போதிலும், அவற்றில் 20 குழுக்களை பஸ்நாயக்க நிலமே உட்பட நிர்வாகம் நீக்கியிருந்தது.
வெளிநாட்டில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான 'கஞ்சிபானி இம்ரான்' என்பவர் சமூக ஊடகங்களில் ஒலிப்பதிவுகளை வெளியிட்டு, தனது தரப்பு காவடி குழுக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாவிட்டால் ஊர்வலத்தின் போது பிரச்சினைகள் ஏற்படலாம் என அச்சுறுத்தியுள்ளார். மேலும், ஊர்வலத்தை நடத்தும் பஸ்நாயக்க நிலமேக்கு மரண அச்சுறுத்தல்களையும் விடுத்துள்ளார். அதற்கு பதிலடியாக 'தெஹி பால மல்லி' என்பவரும் அச்சுறுத்தும் ஒலிப்பதிவுகளை வெளியிட்டுள்ளார். இந்த ஒலிப்பதிவுகள் பிரதான ஊடகங்களிலும் சமூக ஊடக வலைத்தளங்களிலும் பரவலாகப் பரவின.
இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சட்டத்தரணியும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான எஃப். யூ. வூட்லர், தற்போதைய புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் பொதுமக்களிடையே தேவையற்ற அச்சமோ அல்லது பதற்றமோ ஏற்படுவதைத் தடுப்பதற்காக இந்த பரிந்துரை செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டார். மேலும், வரலாற்று சிறப்புமிக்க பெரஹர விழாவைக் காண பெருமளவிலான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வருவதால், ஏதேனும் குற்றவியல் மோதல் ஏற்பட்டால், நாட்டிற்கு சர்வதேச அளவில் ஏற்படக்கூடிய அவமானத்தைத் தடுப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என்றும் அவர் மேலும் விளக்கினார்.