இந்தியாவில் புனித யாத்திரைகளுக்காகப் புறப்படும் இலங்கை நாட்டவர்களுக்காகச் செயல்படுத்தப்படும் இலவச (Gratis) விசா வழங்கும் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்றும், தகுதியுள்ள யாத்திரிகர்களுக்கு அந்த வசதி தொடர்ந்து கிடைக்கும் என்றும் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. அதன்படி, இந்திய இ-விசா முறை மூலமாகவும், கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், அம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு ஆகிய நகரங்களில் நிறுவப்பட்டுள்ள இந்திய தூதரக விண்ணப்ப மையங்கள் (ICAC) வழியாகவும் இணையம் மூலம் சாதாரண முறையில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் வாய்ப்பு இலங்கை நாட்டவர்களுக்கு உள்ளது.
புத்தசாசன, மத மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சின் பரிந்துரைகளுடன், பௌத்த புனிதத் தலங்கள் உட்பட புனித யாத்திரைகளுக்காக 10 பேருக்குக் குறையாத குழுக்களாகச் செல்லும் இலங்கை நாட்டவர்களுக்கு இந்த இலவச விசா வசதி கிடைக்கும். விசா சேவை வழங்கும் நிறுவனம் மாறியதால் இந்த நடைமுறை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது, புதிய சேவை வழங்குநர் தனது கடமைகளை ஆரம்பித்தவுடன், இலவச விசா வழங்கும் சேவை மீண்டும் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் புதிய விதிமுறைகளின்படி, யாத்திரிகர்கள் குழுக்களாகவோ அல்லது தனித்தனியாகவோ ICAC மையங்களுக்குச் சென்று பயோமெட்ரிக் தகவல்களை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த பயோமெட்ரிக் தகவல்களை வழங்கும் தேவை 12 முதல் 70 வயதுக்குட்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே பொருந்தும். மேலும், பயோமெட்ரிக் தகவல்களை வழங்க வரும் மூத்த குடிமக்களுக்காக வரிசையில் காத்திருக்கும் நேரத்தைக் குறைக்கும் சிறப்பு விரைவு சேவையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அங்கீகரிக்கப்பட்ட விசா நடைமுறையின் கீழ் விண்ணப்பிக்கும் யாத்திரிகர்களிடமிருந்து எந்த விசா கட்டணமும் வசூலிக்கப்படாது, ஆனால் விண்ணப்பங்களைப் பெறுவதற்கும் தொடர்புடைய சேவைகளை வழங்குவதற்கும் மட்டுமே சம்பந்தப்பட்ட ICAC மையத்திற்கு ரூபா 1,855 சேவை கட்டணம் செலுத்தப்பட வேண்டும் என்றும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளது.