
வரக்காப்பொல, தொரவக பல்லேபாகே பிரதேசத்தில் அமைந்துள்ள அரச அலுவலகம் ஒன்றில் கடமையில் ஈடுபட்டிருந்த சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர் ஒருவரின் கழுத்தில் அணிந்திருந்த இரண்டு பவுண் பெறுமதியான பதக்கத்துடன் கூடிய தங்கச் சங்கிலியை பலவந்தமாகப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்ற இரு சந்தேகநபர்களைத் தேடி வரக்காப்பொல பொலிஸார் விரிவான விசாரணையை ஆரம்பித்துள்ளனர். கடந்த 15ஆம் திகதி மாலை வேளையில் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் அறிக்கைகளின்படி, அன்று மாலை 5.00 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவர் சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்குள் திடீரென நுழைந்துள்ளார். மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் வந்த அந்த நபர் உத்தியோகத்தரிடம் இருந்த தங்கச் சங்கிலியை திருடிவிட்டு, அலுவலகத்திற்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் மீண்டும் ஏறி மற்றவருடன் உடனடியாக பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்திற்கு முகங்கொடுத்த சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர் இது குறித்து வரக்காப்பொல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார். கொள்ளைச் சம்பவத்தை மேற்கொண்ட நபர்கள் குறித்து இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை என்பதுடன், தப்பிச் சென்ற சந்தேகநபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்காக வரக்காப்பொல பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் உத்தியோகத்தர்கள் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.