மொரட்டுவ பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டதையடுத்து, அந்தப் பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. சுகாதாரப் பிரிவு அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் பின்னர் நேற்று (06) இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன தெரிவித்தார்.
இதற்கு முன்னரும் மாணவர்களிடையே டெங்கு நோய் பரவும் அபாயம் காரணமாக கொழும்பு அழகியல் கலைப் பல்கலைக்கழகமும் தற்காலிகமாக மூடப்பட வேண்டியிருந்ததை நினைவுபடுத்திய பிரதி அமைச்சர், அங்கு நிலவும் நிலைமையைக் கருத்தில் கொண்டு எதிர்வரும் 13ஆம் திகதி அந்தப் பல்கலைக்கழகத்தை மீண்டும் திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கடந்த 4ஆம் திகதி தெரிவித்தார்.
எவ்வாறாயினும், நாட்டின் ஏனைய உயர்கல்வி நிறுவனங்களில் இவ்வாறான கொத்தணி ரீதியான நுளம்புப் பெருக்கம் அல்லது டெங்கு நோய் பரவல் எதுவும் பதிவாகவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். அதன்படி, ஏனைய பல்கலைக்கழகங்களை மூடுமளவுக்கு பாரதூரமான தாக்கம் அல்லது தேவை இதுவரை எழவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.