தென் சீனக் கடலில் சர்ச்சைக்குரிய கடல் பகுதியில் தங்கள் மீனவர்களுக்கு உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற படகுகளுக்கு சீனக் கடலோரக் காவல்படை நீர் பீரங்கித் தாக்குதல் நடத்தி கடுமையான இடையூறுகளை ஏற்படுத்தியதாக பிலிப்பைன்ஸ் குற்றம் சாட்டுகிறது. கடந்த வியாழக்கிழமை ஸ்கார்பரோ ஷோல் (Scarborough Shoal) அருகே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. சீன மற்றும் அமெரிக்க இராஜதந்திரிகள் பங்கேற்க மணிலாவில் நடைபெறவிருந்த பிராந்திய பாதுகாப்பு மாநாட்டிற்கு சில மணிநேரங்களுக்கு முன்னதாக இந்த சம்பவம் நடந்தது ஒரு சிறப்பு அம்சமாகும்.
பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல்படையின் கூற்றுப்படி, ஒரு சீனக் கப்பல் அவர்களின் 'BRP Datu Dumangsil' என்ற கப்பலுக்கு சுமார் 50 மீட்டர் தூரம் வரை நெருங்கி, சுமார் இரண்டு நிமிடங்கள் நீர் பீரங்கித் தாக்குதல் நடத்தியுள்ளது. அரை மணி நேரத்திற்குப் பிறகு, மற்றொரு சீனக் கப்பல் 'Datu Paiburong' என்ற பிலிப்பைன்ஸ் கப்பலுக்கு சுமார் 500 மீட்டர் தூரத்தில் மிகவும் ஆபத்தான முறையில் சென்று இடையூறு ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இந்தத் தாக்குதல்களில் எந்தக் கப்பலுக்கும் சேதம் ஏற்படவில்லை என்றும், மீனவர்களுக்கு எரிபொருள் வழங்கும் நடவடிக்கை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டதாகவும் பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த சீனக் கடலோரக் காவல்படையின் செய்தித் தொடர்பாளர் ஜியாங் லூ (Jiang Lue), பிலிப்பைன்ஸ் கப்பல்கள் தங்கள் எச்சரிக்கைகளை புறக்கணித்து, சீனாவுக்குச் சொந்தமான ஹுவாங்யான் தீவு (Huangyan Island) பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறினார். அதன்படி, அவர்களை சட்டப்பூர்வமாக கண்காணித்து, தடுத்து, அந்தப் பகுதியிலிருந்து வெளியேற்ற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். சர்வதேச சட்ட அடிப்படை இல்லாவிட்டாலும், தென் சீனக் கடலின் பெரும்பகுதிக்கு சீனா உரிமை கோருகிறது. ஸ்கார்பரோ ஷோல் பகுதி பிலிப்பைன்ஸின் லூசான் தீவிலிருந்து 240 கி.மீ தூரத்திலும், பிரதான சீன நிலப்பரப்பிலிருந்து நூற்றுக்கணக்கான கி.மீ தூரத்திலும் அமைந்துள்ள மீன்வளம் நிறைந்த பகுதியாகும்.
இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையே கடந்த நான்கு நாட்களில் பதிவான இரண்டாவது மோதல் இதுவாகும். இதற்கு முன்னர் திங்கட்கிழமை செகண்ட் தாமஸ் ஷோல் (Second Thomas Shoal) பகுதிக்கு அருகில் இரு நாட்டு கடற்படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது சீன அதிகாரிகள் பிலிப்பைன்ஸ் கடற்படை வீரர் ஒருவரை தடியால் தாக்கியிருந்தனர். இந்த நிலைமை காரணமாக, செவ்வாய்க்கிழமை இரு நாடுகளின் தூதுவர்களும் வரவழைக்கப்பட்டு விளக்கம் கேட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கம் (ஆசியான்) உட்பட பல நாடுகளின் பங்கேற்புடன் தற்போது நடைபெற்று வரும் மாநாடுகளிலும் இந்த கடல்சார் பாதுகாப்பு பிரச்சினைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.