கொழும்பு பொரளை மகசின் சிறைச்சாலையில் இன்று (10) நண்பகல் வேளையில் கைதிகள் குழுவினரிடையே மோதல் ஒன்று ஏற்பட்டுள்ளது. சிறைச்சாலை வட்டாரங்களின்படி, இந்த அமைதியற்ற நிலை ஆரம்பத்தில் இரண்டு கைதிகளுக்கு இடையில் ஏற்பட்டதாகவும், பின்னர் மேலும் இரண்டு கைதிகள் இந்த மோதலில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த குழுவினரிடையே இவ்வாறான சண்டை ஏற்படக் காரணம் என்ன என்பது இதுவரை வெளியாகவில்லை.இந்த மோதலில் காயமடைந்த கைதிகள் உடனடியாக வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்க சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்ற மூன்று கைதிகள் குணமடைந்த பின்னர் மீண்டும் மகசின் சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர், சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிப்பதாவது, காயமடைந்த மற்றுமொரு கைதி தொடர்ந்து அதே மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவத்துடன், சிறைச்சாலையில் நிலவும் கடுமையான இடப்பற்றாக்குறை குறித்தும் சிறைச்சாலை வட்டாரங்கள் மேலும் தகவல்களை வெளியிட்டுள்ளன. தற்போதுள்ள வசதிகளின்படி மகசின் சிறைச்சாலையில் அதிகபட்சமாக 600 கைதிகளை மட்டுமே தங்க வைக்க முடியும் என்றாலும், இன்று வரை அதன் சாதாரண கொள்ளளவை விட மிக அதிகமாக சுமார் 3,100 கைதிகள் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.