வத்தளை, பல்லியவத்த பிரதேசத்தில் உள்ள ஒரு விழா மண்டபத்தில் நடைபெற்ற சிறு குழந்தையின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த 39 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (23) இரவு இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் காயமடைந்தவர் உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு கொல்லப்பட்டவர் பொரளை பிரதேசத்தைச் சேர்ந்தவர்.மட்டக்குளி பாலம் அல்லது கதிரான பாலம் அருகில் அமைந்துள்ள குறித்த விழா மண்டபத்திற்கு மோட்டார் காரில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவரே இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தாக்குதலின் பின்னர் துப்பாக்கிதாரி வந்ததாக சந்தேகிக்கப்படும் குறித்த கார், ஜா-எல பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் பின்னர் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, இரண்டு போதைப்பொருள் கடத்தல்காரர் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு முற்றியதால் இந்த கொலை நடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இச்சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை வத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.