வரலாற்று சிறப்புமிக்க தெவிநுவர உத்தபலவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தில் இம்முறை நடைபெறும் எசல பெரஹரா திருவிழாவிற்காக கடந்த ஆண்டு பங்கேற்ற 45 காவடி குழுக்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்க பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தீர்மானித்துள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய மற்றும் மாத்தறை மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளின் பங்கேற்புடன் இன்று பிற்பகல் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் இந்தத் தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மானம் குறித்து விளக்கமளிப்பதற்காக பத்தரமுல்லை சுஹுருபாயவில் அமைந்துள்ள பொலிஸ் ஊடகப் பிரிவில் இன்று விசேட ஊடகவியலாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு கருத்து தெரிவித்த தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்ஸிரி ஜயலத் குறிப்பிடுகையில், 769வது தடவையாக ஏற்பாடு செய்யப்படும் தெவிநுவர பெரஹராவிற்கு காவடி நடன நிகழ்ச்சி சுமார் 35 - 40 ஆண்டுகளுக்கு முன்னர் இணைக்கப்பட்டது என்றார்.
இருப்பினும், கடந்த ஆண்டுகளில் இந்த நடன நிகழ்ச்சியை நிகழ்த்தும்போது சில கலைஞர்கள் அநாகரிகமாக நடந்துகொள்வது, அரை நிர்வாணமாக தோன்றுவது மற்றும் அதிக மது அருந்தி நடனமாடுவது போன்ற பல ஒழுக்கமற்ற நடவடிக்கைகள் பதிவாகியிருந்ததாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டினார். அந்த நிலைமையைக் கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு அத்தகைய ஒழுக்கமற்ற குழுக்கள் சிலவற்றை பெரஹராவிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், இதன் காரணமாக சில பாதாள உலகக் குழுக்களிடையே சில சர்ச்சைக்குரிய விவாதங்கள் சமூக ஊடகங்கள் மூலம் உருவாகியிருந்தன.
தற்போதைய சூழ்நிலையில் பொதுமக்கள் மற்றும் பெரஹராவில் பங்கேற்பவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், அரச புலனாய்வு சேவை உள்ளிட்ட புலனாய்வுப் பிரிவுகள் வழங்கிய அறிக்கைகளின் அடிப்படையில் பொலிஸ் மா அதிபரால் விசேட பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு மேலும் தெரியவந்தது.