1936 ஜூலை 03 அன்று தொடங்கப்பட்ட தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலை, 2026 ஜூலை 03 அன்று தனது பெருமைமிக்க 90வது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. இந்த நிகழ்வுக்கு இணையாக, விலங்கு பிரியர்களின் கவர்ச்சியையும் அன்பையும் பெற்ற தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் பிறந்த இரண்டு சிங்கக் குட்டிகளுக்கு வழங்கப்பட்ட பெயர்களில், "சோரா (Zora) (பெண் சிங்கம்) மற்றும் கைரோ (Cairo) (ஆண் சிங்கம்)" எனத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெயர்கள் அறிவிக்கப்பட்டு, அந்தப் பெயர்களைப் பரிந்துரைத்த வெற்றியாளர்களுக்கு நியூசிலாந்து தூதரகத்தின் பிரதி உயர் ஸ்தானிகர் திருமதி கேப்ரியல் ஐசக் அவர்களால் பரிசுகள் வழங்கப்பட்டன. இங்கு நடைபெற்ற எளிமையான விழாவைத் தொடர்ந்து, சிங்கக் குட்டிகள் தங்கள் தாயுடன் சிங்கத் தீவில் விடுவிக்கப்பட்ட பின்னர், முதல் முறையாக பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில், மிருகக்காட்சிசாலைகள் பணிப்பாளர் நாயகம் கால்நடை வைத்தியர் சந்தன ராஜபக்ஷ, சுற்றாடல் அமைச்சின் மேலதிக செயலாளர் (நிர்வாகம்) எச். எம். பி. பி. ஹேரத், தேசிய மிருகக்காட்சிசாலைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் (செயற்பாடுகள்) அனோமா பிரியதர்ஷினி, பணிப்பாளர் (நிர்வாகம்) ஜனக துஷார பாலசூரிய, பணிப்பாளர் (விலங்கு ஆரோக்கியம் மற்றும் போஷாக்கு) வைத்தியர் தம்மிகா தசநாயக்க, பிரதிப் பணிப்பாளர் (தெஹிவளை) ஹேமந்த சமரசேகர, பிரதிப் பணிப்பாளர் (பாதுகாப்புச் சட்டங்கள் மற்றும் சர்வதேச உறவுகள்) ஏ.எம்.என். டி.பி. அபேசிங்க, பணிப்பாளர் (சுற்றுலா மேம்பாடு மற்றும் மக்கள் தொடர்பு) தினுஷிகா மானவடு, உதவிப் பணிப்பாளர் (தெஹிவளை) பியூஷியா சமன்மலி ஆகிய அதிகாரிகள் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
கடந்த டிசம்பர் மாதம் தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் பிறந்த இரண்டு சிங்கக் குட்டிகளில், பெண் சிங்கத்திற்கு "சோரா (Zora)" என மினுவாங்கொடவைச் சேர்ந்த யெரூஷா மானவடுவும், ஆண் சிங்கத்திற்கு "கைரோ (Cairo)" என தெஹிவளையைச் சேர்ந்த ஆன் ஜயக்ரஹிகாவன் மற்றும் திரிஷாவும் பெயரிட்டனர்.