கடுவெல, சுதர்ஷன மாவத்தை பிரதேசத்தில், குடிநீர் போத்தலிடும் சட்டபூர்வமான வர்த்தகம் என்ற போர்வையில் நடத்தப்பட்டு வந்த பாரிய சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையத்தை சுற்றிவளைத்து ஆறு சந்தேகநபர்களை கைது செய்ய மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகள் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட சுற்றிவளைப்புக்கு பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய புலனாய்வு தகவல் அடிப்படையாக அமைந்துள்ளது.
சட்டபூர்வமான நீர் வணிகம் என்று வெளி உலகிற்கு காட்டி, மிகவும் நுட்பமான மற்றும் இரகசியமான முறையில் இந்த மதுபான கடத்தல் நடத்தப்பட்டுள்ளது என்று பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.இந்த வெற்றிகரமான சுற்றிவளைப்பில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட சட்டவிரோத மதுபானக் குவியலில் 180 மில்லி லீட்டர் கொள்ளளவு கொண்ட உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 18,575 மதுபான போத்தல்கள் அடங்கும். இதன் மொத்த மதுபான அளவு 3,345.5 லீட்டராகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், வெளிநாட்டு மதுபானம் என லேபல் ஒட்டப்பட்ட ஒரு லீட்டர் அளவுடைய நான்கு போத்தல்களும், 750 மில்லி லீட்டர் அளவுடைய ஒரு போத்தலும் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மதுபானம் காய்ச்சுவதற்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணத் தொகுப்பு, எத்தனால் இருப்பதாக சந்தேகிக்கப்படும் ஒரு போத்தல் மற்றும் 50 கிராம் 200 மில்லி கிராம் கேரள கஞ்சா ஆகியவையும் சுற்றிவளைப்பு நடந்த இடத்தில் கைப்பற்றப்பட்ட பொருட்களில் அடங்கும்.
பொலிஸ் வலையில் சிக்கிய ஆறு சந்தேகநபர்கள் 30, 43, 58, 59 மற்றும் 62 வயதுடையவர்கள் ஆவர். இவர்கள் மருதானை, வத்தளை, மிஹிந்தலை, தெற்கு வேபடை, சிப்பிகுளம் மற்றும் கெட்டலாவ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள். வணிக ரீதியாக மிகப்பாரிய அளவில் நடத்தப்பட்ட இந்த கடத்தல் மூலம் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட மதுபானங்கள் தீவின் ஏனைய பகுதிகளுக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு தற்போது மேலதிக விசாரணைகளை விரிவுபடுத்தியுள்ளது.