இலங்கையின் முன்னணி பெண்கள் பாடசாலையொன்றின் ஆங்கில ஆசிரியை ஒருவர் மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச பேஷன் போட்டியில் பிகினி உடையில் தோன்றியதாகவும், அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு அதே பாடசாலையின் ஒரு குழுவினர் அதிபரிடம் கோரிக்கை விடுத்ததாகவும் அண்மைய நாட்களில் சமூக ஊடகங்களில் ஒரு செய்தி பரவலாகப் பரவியது. ஆசிரியர் தொழிலுக்கு இத்தகைய நடத்தை பொருத்தமற்றது என்று கூறி பல்வேறு தரப்பினரின் கவனத்தை இந்த பதிவுகள் ஈர்த்தன.
எவ்வாறாயினும், உண்மைச் சரிபார்ப்பின் போது, இந்தச் செய்தி முற்றிலும் பொய்யானது மற்றும் தவறாக வழிநடத்துவது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட புகைப்படங்களில் தோன்றுபவர் இலங்கையர் அல்ல அல்லது இலங்கை வம்சாவளியைச் சேர்ந்தவர் அல்ல, மாறாக மத்திய அமெரிக்க நாடான குவாத்தமாலாவைச் (Guatemala) சேர்ந்த ஒரு குடிமகன் ஆவார். ஜெய்மி ஸ்டெபனி (Jeyme Stefany) என்ற அவர் குவாத்தாமாலாவில் நடைபெற்ற "Monja Blanca" அழகுராணிப் போட்டியில் பங்கேற்றுள்ளார்.
பல உள்ளூர் சமூக ஊடகப் பக்கங்களும், சில பிரபலமான நபர்களும் இந்த தவறான தகவல்களை சரிபார்க்காமல் பகிர்ந்துள்ளனர். இதன் விளைவாக, உண்மை வெளிப்படும் வரை, பலர் பொய்யான செய்தியின் அடிப்படையில் பல்வேறு கருத்துக்களை முன்வைத்துள்ளனர் என்பது தெளிவாகிறது.