
தனது காதலியுடன் எடுத்த ஆபாச வீடியோ கிளிப் ஒன்றை அவளது பேஸ்புக் கணக்கு மூலம் சமூக ஊடகங்களில் வெளியிட்ட சம்பவம் தொடர்பாக கோனாபினுவல பொலிஸில் கடமையாற்றிய 22 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் அலுபோமுல்ல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்திற்கு முகங்கொடுத்த அலுபோமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த யுவதி அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் கடந்த 19ஆம் திகதி இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுமார் மூன்று வருடங்களாக நீடித்த காதல் உறவின் போது இருவரும் ஒன்றாக இருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ கிளிப் ஒன்றை, சந்தேகநபரான அதிகாரி சம்பந்தப்பட்ட யுவதியின் பேஸ்புக் கணக்கைப் பயன்படுத்தி அவளது தோழி ஒருவருக்கு அனுப்பியுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பின்னர் இது குறித்து யுவதி பொலிஸில் முறைப்பாடு செய்தவுடன் கோபமடைந்த கான்ஸ்டபிள், அந்த முறைப்பாட்டை வாபஸ் பெறாவிட்டால் வீடியோவை முழு சமூக ஊடகங்களிலும் வெளியிடுவேன் என்று அவளுக்கு தொடர்ந்து தொலைபேசியில் அச்சுறுத்தியுள்ளதாகவும், பின்னர் அவர் அதை முகநூலில் வெளியிட்டுள்ளதாகவும் முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸாருக்கு அழைக்கப்பட்ட பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், சந்தேகநபரான அதிகாரியின் இந்தச் செயலால் முறைப்பாட்டாளர் யுவதி மிகுந்த வெட்கத்திற்கும் பயத்திற்கும் ஆளாகியுள்ளார் என்பதும், பாலியல் வெளிப்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இலங்கை தண்டனைச் சட்டக்கோவையின் 345 மற்றும் 486 ஆகிய பிரிவுகளின் கீழ் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பந்தப்பட்ட வீடியோ யுவதியின் சம்மதத்துடன் அவளது சொந்த கைபேசியில் பதிவு செய்யப்பட்டுள்ளதால், இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிடுவதற்கு அவளுக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் பொலிஸார் விசேட விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அலுபோமுல்ல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் சஞ்சீவ லக்மால் விஜேவீரவின் ஆலோசனைக்கமைய மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. சந்தேகநபரான பொலிஸ் கான்ஸ்டபிள் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.