கபிலவின் மனைவி பிரியங்காவுக்கு திறந்த பிடியாணை

warrants-for-kapilas-wife-priyanka

ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகள் தொடர்பில், ஸ்ரீலங்கன் விமான சேவையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நயோமாலி விஜேநாயக்கவுக்கு திறந்த பிடியாணை பிறப்பிக்க கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று (15) உத்தரவிட்டார்.




இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய விசாரணை அதிகாரியால் முன்வைக்கப்பட்ட விடயங்களைக் கருத்திற்கொண்டு நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். சம்பவத்தின் இரண்டாவது சந்தேகநபரான அவருக்கு இதற்கு முன்னர் ஒரு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்ததால், இந்த திறந்த பிடியாணையை ஆங்கிலத்தில் பிறப்பிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையும் நீதவானின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இதற்கிடையில், சம்பந்தப்பட்ட சந்தேகநபர் சார்பில் பிணை வழங்கியிருந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி பிரியங்கி அனுஷ்கா விஜேநாயக்க ஆகியோரை அந்த பிணைப் பொறுப்பிலிருந்து விடுவிக்குமாறு அவர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா நீதிமன்றத்தில் கோரினார். அந்த இரண்டு பிணையாளர்களுக்கும் வெளிநாடு செல்ல வேண்டிய தேவை இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்குமாறும், அதற்காக வைக்கப்பட்டிருந்த 10 மில்லியன் ரூபாய் பிணைப் பணத்தை அரசுடமையாக்குவதற்கு எந்தத் தடையும் இல்லை என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி அப்போது தெரிவித்தார்.




அப்போது வழக்குக் கோப்பை ஆராய்ந்த நீதவான் பசன் அமரசேன, நீதிமன்றத்தில் செலுத்தப்பட வேண்டியது 10 மில்லியன் அல்ல, 200 இலட்சம் ரூபாய் பிணைப் பணம் என்று சுட்டிக்காட்டினார். மேலும், அந்த பிணைப் பணத்தை அரசுடமையாக்குவதற்கு முன் அது குறித்து நீதிமன்றத்தில் விடயங்கள் முன்வைக்கப்பட வேண்டும் என்றும் நீதவான் குறிப்பிட்டார். அதன்படி, முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியின் மனைவி பிரியங்கா நயோமாலி சார்பில் ஆஜரான பிணையாளர்களின் பிணையை நீக்குமாறும், சம்பந்தப்பட்ட பிணைப் பணத்தை அரசுடமையாக்குவதற்கான காரணங்களை எழுத்துப்பூர்வமாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்ட நீதவான், வழக்கை மீண்டும் எதிர்வரும் 22ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

Post a Comment

Previous Post Next Post