அறுவை சிகிச்சை மூலம் பாலின அடையாளத்தை மாற்றிக்கொள்ள அனுமதிக்கக் கூடாது என்று கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

the-petition-to-allow-the-change-of-gender-identity-through-surgery-was-closed

உயிரியல் அடிப்படையிலிருந்து விலகி, தனிநபர்கள் தங்கள் விருப்பப்படி அறுவை சிகிச்சை மூலம் பாலின அடையாளத்தை மாற்றிக்கொள்ள வசதி செய்யும் வகையில் வெளியிடப்பட்ட அரச சுற்றறிக்கைகள் மற்றும் திட்டங்களை இரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுக்காமல் தள்ளுபடி செய்ய உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இலங்கை விமானப்படையின் ஓய்வுபெற்ற மாற்றுத்திறனாளி படைப்பிரிவு அதிகாரியான சாந்த ஜயதிலக்க என்பவரால் இந்த மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.




பிரதம நீதியரசர் பிரீதிப்பத்மன் சூரசேன மற்றும் உயர் நீதிமன்ற நீதியரசர் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு பரிசீலிக்கப்பட்டது. இதில் பிரதிவாதிகளாக சட்டமா அதிபர், பெண்கள் விவகார அமைச்சர் உள்ளிட்டோரும், முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க மற்றும் தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோரும் பெயரிடப்பட்டிருந்தனர்.

மனு பரிசீலிக்கப்பட்டபோது, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நிர்மலன் விக்னேஸ்வரன், குறித்த மனு தாக்கல் தாமதமாகிவிட்டதாகவும், அதற்கு அத்தியாவசியமான தரப்பினர் முறையாக பெயரிடப்படவில்லை என்றும் கூறி ஆரம்ப ஆட்சேபனையை எழுப்பினார். அவர் முன்வைத்த ஆரம்ப ஆட்சேபனையை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம், மனுவை விசாரணைக்கு எடுக்க மறுத்து அதை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுத்தது.




மருத்துவ அறுவை சிகிச்சைகள் மூலம் பாலினத்தை மாற்றுவதற்கு சட்ட ஏற்பாடுகள் இல்லாத போதிலும், 2016 ஆம் ஆண்டு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்கள் மற்றும் சுற்றறிக்கைகளின்படி மருத்துவச் சான்றிதழின் அடிப்படையில் பாலின அடையாளத்தை மாற்றிக்கொள்ள வழி ஏற்பட்டுள்ளதாக மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறு மாற்றமடையும் நபர்களுக்கு அரசாங்கம் புதிய பிறப்புச் சான்றிதழ்கள் மற்றும் தேசிய அடையாள அட்டைகளை வழங்குவது முற்றிலும் சட்டவிரோதமானது என்றும், கடந்த அரசாங்கங்கள் போலவே தற்போதைய அரசாங்கமும் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

தங்கள் விருப்பத்தின் பேரில் இவ்வாறு பாலின அடையாளத்தை மாற்றிக்கொள்ள அனுமதிப்பது சட்டத்திற்கு முரணான ஓரினச்சேர்க்கை திருமணங்களுக்கு வழிவகுக்கும் என்று மனுதாரர் மேலும் குறிப்பிடுகிறார். பொது வாக்கெடுப்பு இல்லாமல் தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் மட்டுமே பாலின வேறுபாட்டை தீர்மானிப்பது சட்டவிரோதமானது என்று உயர் நீதிமன்றம் அண்மையில் வழங்கிய தீர்ப்பையும் மேற்கோள் காட்டும் மனுதாரர், இந்த நடவடிக்கையின் காரணமாக தனது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அறிவிக்குமாறும், அதனுடன் தொடர்புடைய அனைத்து சுற்றறிக்கைகள் மற்றும் அரசு திட்டங்களை இரத்து செய்யுமாறும் நீதிமன்றத்திடம் கோரினார்.

Post a Comment

Previous Post Next Post