தம்புத்தேகம, தலாவ, கல்னேவ பிரதேச செயலகப் பிரிவுகளில் 91,810 மக்களுக்குப் பயனளிக்கும் தம்புத்தேகம நீர் வழங்கல் திட்டம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் நேற்று (10) மாலை மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
சீன அபிவிருத்தி வங்கி (CDB) வழங்கிய சலுகைக் கடனின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம், 2022 மே மாதம் முதல் 2024 மே மாதம் வரையிலான காலப்பகுதியில் கடன் மறுசீரமைப்புச் செயல்முறை காரணமாக இடையில் நிறுத்தப்பட்டிருந்த போதிலும், இதன் தேசிய முக்கியத்துவத்தை அங்கீகரித்து, இலங்கை அரசாங்கத்தின் நிதியையும் பயன்படுத்தி, தற்போதைய அரசாங்கத்தின் கீழ் திட்டப் பணிகள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டன. பிரதேசத்தில் பரவியுள்ள நாள்பட்ட சிறுநீரக நோய்க்கு ஒரு தீர்வாக நிர்மாணிக்கப்பட்ட இந்த நீர் வழங்கல் திட்டம், பிரதேச மக்களின் சமூக, பொருளாதார நிலையை மேம்படுத்தவும் உதவும்.
இதன் மூலம் 25,000 வீட்டு அலகுகளுக்கு புதிய நீர் இணைப்புகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 32 பில்லியன் ரூபாய் ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இந்த திட்டம் ஒரு நாளைக்கு 18,000 கன மீட்டர் நீர் சுத்திகரிப்பு நிலையத்தையும், 1,500 கன மீட்டர் கொள்ளளவு கொண்ட 03 நீர் கோபுரங்களையும், 12.75 கி.மீ நீளமுள்ள நீர் கடத்தும் குழாய் அமைப்பு ஒன்றையும், 158 கி.மீ நீளமுள்ள விநியோக நீர் குழாய் அமைப்பு ஒன்றையும் கொண்டுள்ளது.