
டிக்டாக் (TikTok) சமூக வலைத்தளம் ஊடாக அறிமுகமான சிறுமியை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் 17 வயது இளைஞர் ஒருவர் களுத்துறை வடக்கு பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். மாரவில பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயது பாடசாலை மாணவி ஒருவரே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதுடன், சந்தேகநபரான இளைஞரின் வீட்டில் தங்கியிருந்த சிறுமியையும் பொலிஸ் பொறுப்பில் எடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரும், பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்ட சிறுமியும் மேலதிக விசாரணைகளுக்காக மாரவில தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளில், மாரவில பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் கல்வி கற்கும் இந்த மாணவி, டிக்டாக் சமூக ஊடகம் மூலம் களுத்துறை வடக்கு பிரதேசத்தில் வசிக்கும் குறித்த இளைஞரை அடையாளம் கண்டு காதல் உறவை பேணி வந்துள்ளார். பின்னர் சிறுமியின் அழைப்பின் பேரில் சந்தேகநபரான இளைஞர் மாரவிலவில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு தங்கியிருந்தபோது, அவர் சிறுமியை முதல் முறையாக கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளார்.
அதன் பின்னர், இந்த சிறுமி தனது காதலனுடன் களுத்துறை பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டிற்கு வந்துள்ளார். இது குறித்து களுத்துறை வடக்கு பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் உடனடியாக செயற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவினர் சந்தேகநபரை கைது செய்து சிறுமியையும் தங்கள் பொறுப்பில் எடுத்துள்ளனர். கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்கும், வன்புணர்ச்சிக்கும் உள்ளாகியுள்ளதாக கூறப்படும் இந்த பாடசாலை மாணவியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.