தீவின் பொதுப் போக்குவரத்து சேவையை நவீனமயமாக்கும் நோக்கில் இங்கு இறக்குமதி செய்யப்பட்ட தாழ்தள மெட்ரோ (Metro) பேருந்து சேவையைப் பயன்படுத்தும் பயணிகளுக்காக 799 ரூபா பெறுமதியான விசேட வார இறுதி சலுகைப் பொதியொன்றை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. நவீன வசதிகளுடன் கூடிய இந்த 104 இறக்குமதி செய்யப்பட்ட பேருந்துகளைப் பதிவு செய்யும் பணிகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், இந்த பதிவுகள் முடிந்தவுடன், அதாவது இந்த மாத இறுதிக்குள் அனைத்துப் பேருந்துகளும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
கொழும்பு நகரத்தையும் அதனை அண்டிய பிரதேசங்களையும் இலக்கு வைத்து இந்த புதிய பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் சஜீவ கனகரத்ன தெரிவித்தார்.
வார இறுதியில் பயணிக்கும் பயணிகளுக்காக நடைமுறைப்படுத்தப்படும் 799 ரூபா சலுகைப் பொதி தொடர்பான தகவல்களை உறுதிப்படுத்தி, சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்களில் ஒன்றில் எந்தவொரு வழித்தடத்திலும் எத்தனை தடவைகள் வேண்டுமானாலும் பயணிக்க பயணிகளுக்கு இதன் மூலம் வாய்ப்பு கிடைக்கும் என மெட்ரோ நிறுவனத்தின் தலைவர் திலக் திலகரத்ன தெரிவித்தார்.
இந்த விசேட பொதியை செயற்படுத்தும் பெரியவர்களுடன் பயணிக்கும் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களிடமிருந்து எந்தவொரு பயணச்சீட்டு கட்டணமும் அறவிடப்படாது என்பது மற்றொரு சிறப்பம்சமாகும். இங்குள்ள மக்களை இந்த புதிய மெட்ரோ பேருந்து சேவையின் பால் ஈர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், சலுகைப் பொதியை 'LMT GO' மொபைல் செயலி (App) மூலம் பெற்றுக்கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன.