
கடந்த 24 மணி நேரத்தில் பெய்த பலத்த மழை காரணமாக மகாவலி, களனி மற்றும் களு ஆகிய ஆறுகளின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பணிப்பாளர், பொறியியலாளர் எல். எஸ்.
சூரியபண்டார தெரிவித்துள்ளார். குறிப்பாக, மகாவலி கங்கை வடிநிலத்தின் மேல் பகுதிகளான நாவலப்பிட்டி, நானுஓயா மற்றும் வட்டவளை ஆகிய இடங்களில் 200 மில்லிமீட்டருக்கு அண்மித்த அல்லது அதற்கு மேற்பட்ட மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதன் காரணமாக நாவலப்பிட்டிக்கும் பேராதனைக்கும் இடையில் மகாவலி கங்கையை அண்மித்து வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. தற்போது நீர்மட்டம் வேகமாக உயரவில்லை என்றாலும், படிப்படியான அதிகரிப்பு காணப்படுகிறது. நேற்று இரவு சில இடங்களில் 70 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்ததால் நீர்மட்டம் உடனடியாக உயர்ந்தாலும், இந்த நிலைமை அனர்த்த நிலை வரை அதிகரிக்காது என நீர்ப்பாசனத் திணைக்களம் எதிர்பார்க்கிறது.இதேவேளை, களனி கங்கையின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான லக்ஷபான மற்றும் நோர்வூட் ஆகிய பிரதேசங்களில் 100 முதல் 150 மில்லிமீட்டர் வரையான மழை பெய்துள்ளதால் கித்துள்கல உட்பட மேல் வடிநிலப் பகுதிகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இந்த நீர்மட்டங்கள் தற்போது குறையத் தொடங்கியிருந்தாலும், நோர்வூட், கித்துள்கல, அவிசாவளை மற்றும் ஹங்வெல்ல வரையிலான தாழ்நிலப் பகுதிகள் வெள்ளப்பெருக்குக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது. அத்துடன், இரத்தினபுரி மேல் பிரதேசங்களுக்கு அண்மித்த 100 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி காரணமாக இரத்தினபுரியின் நீர்மட்டமும் அபாய நிலையை அடைந்துள்ளதுடன், பல தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கும் நிலை காணப்படுகிறது. எவ்வாறாயினும், நிலவளா மற்றும் கிங் கங்கையை அண்மித்த பகுதிகளில் 50-75 மில்லிமீட்டர் மழை பெய்தாலும், அங்கு வெள்ள அபாயம் இல்லை. அத்துடன், மக ஓயா மற்றும் அத்தனகலு ஓயா வடிநிலப் பகுதிகளிலும் குறிப்பிடத்தக்க மழைவீழ்ச்சி பதிவாகவில்லை.
தற்போது நிலவும் இந்த மோசமான வானிலை நிலைமையைக் கருத்தில் கொண்டு, மத்திய மாகாணத்தின் நுவரெலியா மற்றும் ஹட்டன் கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகளை நடத்துவதா இல்லையா என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் சம்பந்தப்பட்ட அதிபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
மத்திய, சப்ரகமுவ, ஊவா, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அந்தப் பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. குறிப்பாக, சப்ரகமுவ மாகாணத்திலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். அத்துடன், மேல், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் முல்லைத்தீவு மாவட்டத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம். மேலும், வடமத்திய, சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், இடி மின்னல் மற்றும் தற்காலிக பலத்த காற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.