2026 ஆகஸ்ட் 26 அன்று காலை நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பேரழிவில் நேபாளத்தில் 95 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். திபெத் தரப்பில் மூன்று பேர் உயிரிழந்ததுடன், மேலும் 265 பேர் காணாமல் போயுள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சமீப காலங்களில் இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட மிகக் கடுமையான இயற்கை பேரழிவுகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்தச் சம்பவத்தில், ஏராளமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் காணாமல் போனவர்களில் அடங்குவர்.நேபாளத்தின் காத்மாண்டு நகருக்கு வடக்கே அமைந்துள்ள ரசுவா மாவட்டத்தில் உள்ள லெண்டே கோலா என்ற துணை ஆற்றில் திடீரென ஏற்பட்ட இந்த வெள்ளப்பெருக்கு, போதே கோஷி, திரிஷூலி மற்றும் நாராயணி ஆறுகள் வழியாக வேகமாகப் பாய்ந்தது. இதில், கல்ச்சி பகுதியில் திரிஷூலி ஆற்றின் நீர்மட்டம் 30 நிமிடங்களுக்குள் சுமார் 9 மீட்டர் உயர்ந்ததுடன், ஷியாப்ரூபேசி, திமுரே, திரிஷூலி பஜார், தாடிங், சித்வான் மற்றும் கோர்கா உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கின.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 5,200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பனிப்பாறைத் தொடரிலிருந்து சுமார் 2,000 அடி அகலமுள்ள பனி மற்றும் பாறைகளின் அடுக்கு சுமார் ஒரு கிலோமீட்டர் உயரத்திலிருந்து கீழே சரிந்து விழுந்ததே இந்த பேரழிவுக்கு முக்கிய காரணமாகும். இவ்வாறு சரிந்து விழுந்த மண் மற்றும் பனியால் லெண்டே கோலா குறுகிய பள்ளத்தாக்கு அடைபட்டு, தற்காலிக இயற்கை அணை ஒன்று உருவானது. பின்னர் அது உடைந்து, சேறு, கற்கள் மற்றும் நீர் வேகமாகக் கீழே பாய்ந்தது. பேரழிவுக்கு சில நிமிடங்களுக்கு முன் ரிக்டர் அளவுகோலில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது என்றும், இது பனிச்சரிவுக்கு காரணமாக இருந்திருக்கலாம் என்றும் நேபாள வெளியுறவு அமைச்சர் ஷிஷிர் கானால் தெரிவித்தார். இருப்பினும், அதிக மழைப்பொழிவு இதற்கு காரணம் இல்லை என்றும், பனி உருகுதல் இதற்கு ஒரு காரணியாக இருந்ததா என்பது குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருவதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் நேபாளத்தின் பல மாவட்டங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. காணாமல் போனவர்களில் நேபாள இராணுவம் மற்றும் காவல்துறையைச் சேர்ந்த அதிகாரிகளும், இந்தியா, அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் உட்பட 28 நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும் அடங்குவர். குறிப்பாக, கைலாஷ் யாத்திரையில் ஈடுபட்டிருந்த ஏராளமான இந்திய யாத்ரீகர்களும், ரசுவாகடி எல்லைப் பகுதியில் இருந்தவர்களும் காணாமல் போனவர்களில் உள்ளனர். தேடுதல் நடவடிக்கைகளின் மூலம் சிலர் மீட்கப்பட்டுள்ளனர், ஆனால் தற்போதுள்ள அதிக நீர்மட்டம் காரணமாக ஹெலிகாப்டர்களை தரையிறக்குவதிலும் கூட தடங்கல்கள் ஏற்பட்டுள்ளன.
ஆற்றின் இருபுறமும் இருந்த வீடுகள் மற்றும் பல மாடி கட்டிடங்கள் சேற்றில் மூழ்கி அல்லது முற்றிலும் அழிந்துவிட்டன. 19 மோட்டார் வாகனப் பாலங்களும் 40 கிலோமீட்டர் சாலை அமைப்பும் சேதமடைந்துள்ளன. காத்மாண்டுவை இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலை மூடப்பட வேண்டியிருந்தது. நீர்மின் உற்பத்தி அமைப்புகளுக்கு ஏற்பட்ட சேதம் காரணமாக, நேபாளத்தின் தேசிய நீர்மின் உற்பத்தியில் 12 சதவீதத்திற்கும் அதிகமானவை இழக்கப்பட்டுள்ளன. மேலும், மின்சாரம், தகவல் தொடர்பு சேவைகள் மற்றும் சீனாவுடனான கிரோங் எல்லைப் போக்குவரத்துப் பாதையும் முற்றிலும் தடைபட்டுள்ளது.
நேபாளப் பிரதமர் பாலேன்டிர ஷா, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை உடனடியாக உயரமான இடங்களுக்குச் செல்லுமாறு உத்தரவிட்டார். இராணுவம் மற்றும் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டு நிவாரணப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. சீனாவும் தனது தேடுதல் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தியுள்ளது. இந்தியாவும் கீழ் பகுதிகளுக்கு முன்னெச்சரிக்கை எச்சரிக்கைகளை வெளியிட்டு நிவாரணப் பணிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. உலக வெப்பமயமாதல் காரணமாக இமயமலைப் பகுதியில் இதுபோன்ற பேரழிவுகள் அதிகரித்து வருகின்றன. மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதால், ரசுவா மற்றும் கீழ் பகுதிகளில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.