துபாயில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவரான லலித் கன்னங்கர என்ற 'பஸ் லலியா' 25ஆம் திகதி இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளார். அவரை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசேட பொலிஸ் அதிகாரிகள் குழு கடந்த 21ஆம் திகதி துபாய் புறப்பட்டுச் சென்றுள்ளது.
சர்வதேச பொலிஸாரால் சிவப்பு அறிவிப்புகள் கூட வெளியிடப்பட்டிருந்த இந்த சந்தேகநபர் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் துபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோரின் தலையீட்டின் பேரில் இவரை இலங்கைக்கு அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு சில மாதங்களுக்கு முன்னர் துபாய் பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டு துபாய் பொலிஸாரின் காவலில் வைக்கப்பட்டு, அந்நாட்டு சட்ட நடவடிக்கைகளின் பின்னர் அவரை இலங்கைக்கு ஒப்படைக்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரன்மல் கொடிதுவக்கு, பிரதிப் பொலிஸ்மா அதிபர் சந்தன கொடிதுவக்கு ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில், சந்தேகநபரை அழைத்து வருவதற்காக, அப்பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கமல் ஆரியவன்சவின் தலைமையில் அதிகாரிகள் குழுவொன்று துபாய் சென்றுள்ளது.
தனியார் பஸ் ஒன்றில் நடத்துநராக தனது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்ததால் இவருக்கு 'பஸ் லலியா' என்ற பெயர் சூட்டப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. 8 கொலைகள், கொலை முயற்சிகள் மற்றும் கப்பம் பெறுதல் உள்ளிட்ட பல குற்றங்களுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபராக இவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அதன்படி, 2024 ஆம் ஆண்டில் தனியார் பஸ் உரிமையாளர் வஜிர நிஷாந்தவை சுட்டுக் கொன்றமை, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் ஹன்வெல்ல பிரதேசத்தில் இரண்டு வர்த்தகர்களைக் கொன்றமை மற்றும் பாதாள உலகத் தலைவர் மஞ்சு என்ற ரோஷன் மற்றும் அவரது சீடரைக் கொன்றமை ஆகிய குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
இது தவிர, 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் திகதி ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் மற்றும் வர்த்தகரான சிந்தக குடலிகமவை சுட்டுக் கொன்றமை தொடர்பாகவும் இவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. மேலும், 2025 ஆம் ஆண்டு ஜூலை 6 ஆம் திகதி கொழும்பு இரவு விடுதி ஒன்றில் மற்றொரு பாதாள உலகக் கும்பல் தலைவரான தெஹிவளை ருவன் மற்றும் அவரது சீடரை சுட்டுக் கொல்ல முயற்சித்த சம்பவத்துடனும் இவருக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சாந்த முதுன்கொட்டுவ என்ற 'தனா'வை கொன்றது லலித் கன்னங்கர என பொலிஸார் தெரிவிக்கின்றனர். வேலையில்லாமல் இருந்த லலித் கன்னங்கரவை தனது வீட்டிற்கு அழைத்து வந்து பஸ் நடத்துநர் வேலையை வழங்கி தனது வீட்டில் தங்க வைத்த நபரும், கப்பம் கொடுக்காததால் இவரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
துபாயில் மறைந்திருந்து தனது சீடர்கள் மூலம் ஹன்வெல்ல, மீகொட மற்றும் கொஸ்கம ஆகிய பிரதேசங்களில் உள்ள பணக்கார வர்த்தகர்களிடமிருந்து இலட்சக்கணக்கான ரூபாய்களை கப்பமாகப் பெற்றுக்கொள்ள இவர் நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த குற்றக் கும்பலின் அச்சுறுத்தல்கள் மற்றும் பயமுறுத்தல்கள் காரணமாக, சம்பந்தப்பட்ட பிரதேசங்களில் உள்ள சில பணக்கார வர்த்தகர்கள் தங்கள் வணிக இடங்களையும் வீடுகளையும் கூட கைவிட்டு வேறு பிரதேசங்களில் குடியேறியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த சந்தேகநபரின் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் துபாயில் ஒரு ஆடம்பரமான வீட்டில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவருடன் மேலும் இரண்டு பாதாள உலகக் கும்பல் தலைவர்களான 'கொண்ட ரஞ்சி' மற்றும் 'வனதே வத்து' ஆகியோரும் அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், பஸ் லலியாவின் இலங்கையில் இருந்த பல சீடர்களும் கடந்த காலத்தில் மேற்கு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான 'பஸ் லலியா' துபாயில் கைது செய்யப்பட்டதை அடுத்து, ஹன்வெல்ல, ஹோமாகம மற்றும் கடுவலை ஆகிய பிரதேச மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்ததாக 2025 ஒக்டோபர் மாதம் தெரிவிக்கப்பட்டது. பிரதேசவாசிகள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியும், பாதுகாப்புப் படையினர் மற்றும் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்தும் அப்பிரதேசங்கள் முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டியிருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.