போதைப்பொருள் விநியோக வலையமைப்புடன் தொடர்புடைய சிறைச்சாலை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டார்

a-prison-officer-involved-in-a-drug-supply-racket-was-arrested

மகாசின் சிறைச்சாலையில் கைதி ஒருவருக்கு போதைப்பொருள் விநியோகிக்கும் வர்த்தகத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட 53 வயதுடைய சிறைச்சாலை அதிகாரி ஒருவர் கல்கிஸ்ஸை பிரிவுக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விசாரணையின் போது, சுமார் 2 மில்லியன் ரூபாய் பெறுமதியான 100 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 20 கிராம் ஹெரோயின் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.




கல்கிஸ்ஸை பிரதேசத்தில் குறித்த போதைப்பொருள் கையிருப்புடன் 32 வயதுடைய ஒருவர் முதலில் கைது செய்யப்பட்டதை அடுத்து இந்த வர்த்தகம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. பொலிஸ் விசாரணையின் போது, மகாசின் சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவர் வாட்ஸ்அப் (WhatsApp) மூலம் தன்னைத் தொடர்புகொண்டு போதைப்பொருள் பொட்டலத்தைப் பெறும் இடத்திற்கு அனுப்பியதாக குறித்த சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.

பின்னர், அந்த போதைப்பொருள் பொட்டலம் பொரளை, வனத்த வீதியில் மற்றொரு நபரிடம் ஒப்படைக்கப்படவிருந்தது. அதன்படி செயல்பட்ட பொலிஸ் அதிகாரிகள் அந்த இடத்தில் ஒரு விசேட சுற்றிவளைப்பை மேற்கொண்டனர். அப்போது, சிறைச்சாலை விளையாட்டு உடையில் போதைப்பொருள் பொட்டலத்தைப் பெற வந்த நபர் சுற்றிவளைப்பில் ஈடுபட்ட அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் மகாசின் சிறைச்சாலையில் கடமையாற்றும் அதிகாரி என உறுதிப்படுத்தப்பட்டது.




தங்காலை, பெலியத்த பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய இந்த சிறைச்சாலை அதிகாரி இதற்கு முன்னர் வெலிக்கடை சிறைச்சாலையில் கடமையாற்றியவர். கடந்த ஜனவரி மாதம் மகாசின் சிறைச்சாலை ஊழியர்களுடன் இணைந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மற்றைய சந்தேகநபர் தெஹிவளை, வைத்தியசாலை வீதி பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடையவர்.

இச்சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸை பிரிவுக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post