சட்டவிரோதமாகச் சம்பாதித்த பணத்தைப் பயன்படுத்தி மாத்தறைப் பிரதேசத்தில் ஒன்றரை ஏக்கர் காணி வாங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினால், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ செலுத்தியிருந்த பிணைப்பணத்தை அரசுடமையாக்க மாத்தறை நீதவான் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (18) உத்தரவிட்டது.
மாத்தறை, எலியகந்த வீதியில், பிரவுன்ஹில்லில் அமைந்துள்ள ஒரு சொத்து தொடர்பாக பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் (FCID) தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு மாத்தறைப் பிரதான நீதவான் சத்துர திசாநாயக்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கில் மூன்றாவது பிரதிவாதியான பசில் ராஜபக்ஷ, நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளக்கூடிய மருத்துவ அறிக்கையைக் கூட சமர்ப்பிக்காமல் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்துள்ளார் என்று இங்கு நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும், அவருக்காகப் பிணைதாரர்களாகக் கையெழுத்திட்ட மூன்று பேருக்கும் நீதவான் அபராதம் விதித்ததுடன், குறித்த அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் அவர்களைச் சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டார்.
இது தவிர, பசில் ராஜபக்ஷவுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டிருந்த கைது வாரண்ட்டை 2026 அக்டோபர் 27 ஆம் திகதி வரை நீடிக்க நீதிமன்றம் நடவடிக்கை எடுத்தது.
செவ்வாய்க்கிழமை வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, முதல் மற்றும் இரண்டாவது பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அத்துடன், முறைப்பாடு சார்பில் FCID அதிகாரிகள் மற்றும் பிரதிவாதிகள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அனில் டி சில்வா உட்பட சட்டத்தரணிகள் குழுவும் ஆஜராகினர்.