இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் செப்டம்பர் 8 முதல் 10 ஆம் தேதி வரை இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். புதுடெல்லியில் உள்ள பத்திரிகை தகவல் பணியகம் (PIB) இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் சார்பில் வெளியிட்ட அறிக்கையில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தின் போது, அவர் இலங்கைத் தலைவர்களுடன் பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளதுடன், கொழும்பில் உள்ள இந்திய சமூகத்தினரை சந்தித்து உரையாடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்திய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் வெளிவிவகார அமைச்சகத்தின் சிரேஷ்ட அதிகாரிகளைக் கொண்ட உயர்மட்டக் குழுவொன்று ராஜ்நாத் சிங்குடன் இந்த விஜயத்தில் இணைந்துள்ளது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு ஆழமான நாகரிக வேர்களைக் கொண்டதுடன், பிராந்திய பாதுகாப்பு, பாதுகாப்புத் துறை, பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு மற்றும் வலுவான மக்கள் உறவுகளை அடிப்படையாகக் கொண்ட பலதரப்பட்ட பங்காளித்துவத்தைக் கொண்டுள்ளது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா வழங்கிய ஆதரவும், 2025 ஆம் ஆண்டில் ஏற்பட்ட 'டிட்வா' சூறாவளிக்குப் (Cyclone Ditwah) பிறகு முதலில் நிவாரணம் வழங்கிய நாடாக இந்தியா ஆற்றிய பங்கும் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இந்த விஜயம் இந்தியாவின் 'அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை' (Neighbourhood First) கொள்கை மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் 'மகாசாகர்' (MAHASAGAR - Mutual and Holistic Advancement for Security and Growth Across Regions) என்ற கருத்தாக்கத்தின் மீதான அசைக்க முடியாத அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.
சக்திவாய்ந்த கடற்படை மற்றும் பாதுகாப்புப் பங்காளித்துவம் உட்பட இரு நாடுகளுக்கும் பரஸ்பரம் நன்மை பயக்கும் துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்த இந்த விஜயம் வழிவகுக்கும் என்று இந்திய பாதுகாப்பு அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.