நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்ற முறைகேடுகளுக்கு பொறுப்பானவர்களை தடயவியல் தணிக்கை மூலம் அடையாளம் காண முடியும்

forensic-audit-may-identify-those-responsible-for-coal-import-irregularities

இலங்கைக்கு நிலக்கரி இறக்குமதி செய்வதில் இடம்பெற்றுள்ள ஊழல் மற்றும் முறைகேடுகளுக்குப் பொறுப்பானவர்கள் யார் என்பதை தடயவியல் தணிக்கை மூலம் துல்லியமாக அடையாளம் காண முடியும் என சிரேஷ்ட தணிக்கை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். நிலக்கரி இறக்குமதிச் செயல்முறையில் உள்ள முறைகேடுகள் குறித்து விசாரிக்கும் விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்த தணிக்கையாளர் நாயகத்தின் சார்பில் ஆஜரான அந்த அதிகாரி, கடந்த பிற்பகல் இதனைத் தெரிவித்தார்.




2009 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியை உள்ளடக்கி வெளியிடப்பட்ட விசேட தணிக்கை அறிக்கையில் முறைகேடுகளுடன் தொடர்புடைய நபர்களின் பெயர்கள் குறிப்பிடப்படாதது குறித்து ஆணைக்குழு வினவிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயங்களை வெளிப்படுத்தினார்.

நிலக்கரி இறக்குமதி தொடர்பான குறிப்பாணைகளை அமைச்சரவை அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கும் போது, பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களால் வழங்கப்படும் தகவல்களின் சரியான தன்மையை உறுதிப்படுத்தும் பொறுப்பு எரிசக்திச் செயலாளர்களுக்கும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கும் உள்ளது என்பதை தணிக்கைக் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் அவர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, பொதுமக்களின் அபிலாஷைகளுக்கு ஏற்ப பொதுப் பணத்தைச் செலவிடும் போது, சொத்துக்கள், பொறுப்புகள், வருமானம், செலவுகள் மற்றும் உரிமைகள் ஆகிய ஐந்து விடயங்கள் தொடர்பில் தணிக்கை முறைகள் மூலம் விசேட கவனம் செலுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.




சம்பந்தப்பட்ட தணிக்கையின் போது அரசாங்கத்திற்கு ஏற்பட்ட பல பெரிய இழப்புகள் வெளிப்படுத்தப்பட்டன, மேலும் சரியான முறையில் செயல்பட்டிருந்தால் அந்த இழப்புகளைத் தவிர்த்திருக்க முடியும் என்பதும் அவதானிக்கப்பட்டுள்ளது. இலங்கை நிலக்கரி நிறுவனம் கொள்முதல் செயல்முறைக்கு முன்கூட்டியே சரியான திட்டங்களை வகுக்காதது மற்றும் கேள்விப்பத்திரங்களை அழைக்கும் போது தொழில்நுட்ப மற்றும் கேள்விப்பத்திரக் குழுக்கள் எடுத்த தன்னிச்சையான மற்றும் தொலைநோக்கற்ற முடிவுகள் இதற்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன. மேலும், கேள்விப்பத்திர மேன்முறையீட்டுக் குழுவின் பரிந்துரைகளை புறக்கணித்து அமைச்சரவை எடுத்த முடிவுகளும், அமைச்சரவை முடிவுகளுக்கு அப்பால் நிலக்கரி கொள்முதல் குழுக்கள் செயல்பட்டதும் இக்காலப்பகுதியில் காணப்பட்டதாக சிரேஷ்ட தணிக்கை அதிகாரி மேலும் தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post