தேவையான தகுதிகளைப் பூர்த்தி செய்யாமல் பிரித்தானிய அரச கடற்படைப் பயிற்சியை வழங்கியதன் மூலம் அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் முன் விசாரணை மாநாட்டை எதிர்வரும் ஒக்டோபர் 13ஆம் திகதி நடத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரவீந்து பிரேமரத்ன உத்தரவிட்டார்.
2006 செப்டெம்பர் 01ஆம் திகதி முதல் 2007 ஜூன் 08ஆம் திகதி வரையான காலப்பகுதியில் கடற்படைத் தளபதியாக செயற்பட்டு, உரிய தகுதிகள் இல்லாத யோஷித ராஜபக்ஷவுக்கு பிரித்தானிய அரச கடற்படைப் பயிற்சி கல்லூரியில் "அரச கடற்படை அதிகாரி பாடநெறியை" கற்பதற்கு முறையற்ற விதத்தில் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்து அரசுக்கு 62,84,217 ரூபா நஷ்டம் ஏற்படுத்தியமை தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு முன்னாள் கடற்படைத் தளபதிக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. அத்துடன், குறித்த பாடநெறியில் கலந்துகொண்டு முறையற்ற இலாபம் பெற்றதாக யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகவும் தனியான குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இலஞ்சச் சட்டத்தின் கீழ் ஊழல் என்ற குற்றத்தின் கீழ் 08 குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது. வழக்கு நீதிமன்றத்தில் அழைக்கப்பட்டபோது, பிரதிவாதிகளான முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் யோஷித ராஜபக்ஷ ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த நீதிபதி, எதிர்வரும் ஒக்டோபர் 13ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பிரதிவாதிகளுக்கு உத்தரவிட்டார்.