ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு இரண்டு கோடியே அறுபது இலட்சத்திற்கும் அதிகமான நிதி இழப்பை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட கேகாலை நகர சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் கசுன் மதுசங்க பண்டாரவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கண்டி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சந்தேகநபரான நாடாளுமன்ற உறுப்பினர் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கேகாலை மாவட்டத்தில் நடத்தப்பட்ட "கபானா" திட்டத்தின் ஒப்பந்த நிபந்தனைகளை நிறைவேற்றாததால் இந்த நிதி இழப்பு ஏற்பட்டதாக சம்பந்தப்பட்ட நிறுவனம் தாக்கல் செய்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட ஒப்பந்தத்தின்படி, 18 கபானாக்களைக் கொண்ட இந்த திட்டம் கடந்த பெப்ரவரி 11 ஆம் திகதிக்குள் முழுமையாக முடிக்கப்பட்டு ஒப்படைக்கப்படவிருந்தது. இருப்பினும், குறித்த காலக்கெடுவுக்குள் நாடாளுமன்ற உறுப்பினரால் 14 கபானாக்கள் மட்டுமே முடிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
திட்டத்தை குறித்த திகதியில் முடிக்காததால் ஏற்பட்ட பாரிய இழப்பிற்காக சம்பந்தப்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனம் இவ்வாறு சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.