250 கோடி ரூபாய் பெறுமதியான காணியை மோசடியாக விற்பனை செய்த வழக்கு - டிலந்த மாலகமுவவுக்கு வெளிநாட்டு பயணத் தடை

case-of-fraudulent-sale-of-land-worth-250-million---dilantha-malagamu-banned-from-traveling-abroad

கொழும்பு பர்ன்ஸ் பிளேஸில் அமைந்துள்ள 250 கோடி ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியுடைய காணியொன்றிற்காக போலி ஆவணங்களைத் தயாரித்து விற்பனை செய்த மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரபல மோட்டார் வாகன ஓட்ட வீரர் டிலந்த மாலகமுவ உட்பட நால்வர் வெளிநாடு செல்வதைத் தடுக்கும் உத்தரவை கொழும்பு பிரதான நீதவான் அசங்க போதரகம பிறப்பித்துள்ளார்.




டிலந்த மாலகமுவ, சாந்த விதான கமகே, டெஸ்மண்ட் அமரசிங்க மற்றும் சமன் ஜயவீர ஆகியோருக்கே இவ்வாறு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் நீதிமன்றத்தை தவிர்த்து வருவதால், அவர்கள் நாட்டை விட்டு வெளியேறினால் விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படலாம் என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்வைத்த வாதத்தை பரிசீலித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

குறித்த காணி போலி ஆவணங்கள் மூலம் ஒரு பில்லியன் ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் குறிப்பிட்டதுடன், அந்த கொடுக்கல்வாங்கலின் போது டிலந்த மாலகமுவவுக்கு கிடைக்க வேண்டிய 50 கோடி ரூபாய்க்குப் பதிலாக 14 வாகனங்கள் கிடைத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் நீதிமன்றத்திற்கு சுட்டிக்காட்டியது.




இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை விரிவுபடுத்தும் வகையில், சந்தேகநபர்களின் வங்கிக் கணக்குகள் தொடர்பான அறிக்கைகளை வழங்குமாறு 89 வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் முகாமையாளர்களுக்கு உத்தரவிடவும் நீதவான் நடவடிக்கை எடுத்தார்.

டிலந்த மாலகமுவ சார்பில் ஆஜரான சட்டத்தரணி சம்பத் ஜயவர்தன, தனது கட்சிக்காரர் பொலிஸைத் தவிர்க்கவில்லை என்றும், அவர் இருதய நோய்க்கு சிகிச்சை பெற்று வந்ததால் எதிர்காலத்தில் வாக்குமூலம் அளிக்க நடவடிக்கை எடுப்பார் என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தார். ஏனைய சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளும் தமது கட்சிக்காரர்கள் வாக்குமூலம் அளிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தனர்.



முன்வைக்கப்பட்ட விடயங்களைக் கருத்தில் கொண்ட பிரதான நீதவான், இந்த விசாரணைகளின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை எதிர்வரும் ஒக்டோபர் 29ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டார்.

Post a Comment

Previous Post Next Post