
தீவில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, இன்று (21) பல பகுதிகளில் உள்ள 38 பாடசாலைகளை மூடுவதற்கு கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். தற்போதைய மழை மற்றும் அனர்த்த நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட பாடசாலைகளை நடத்துவதா அல்லது நடத்த வேண்டாமா என்பது குறித்து தீர்மானிக்கும் முழு அதிகாரமும் பிரதேச கல்வி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்று காலை 9.00 மணி வரை கிடைத்த அறிக்கைகளின்படி, அதிக எண்ணிக்கையிலான பாடசாலைகள் மத்திய மாகாணத்திலேயே மூடப்பட்டுள்ளன. இதன்படி, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் அமைந்துள்ள 35 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. சப்ரகமுவ, தென் மற்றும் மேல் மாகாணங்களிலும் தலா ஒரு பாடசாலை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்கள் இணைந்து கலந்துரையாடி, முன்னைய வழிகாட்டல்களின்படி இந்தத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் தெரிவித்தார். ஏதேனும் சிக்கலான நிலைமை ஏற்பட்டால், கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண கல்விப் பணிப்பாளர், பிரதம செயலாளர் மற்றும் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளைத் தொடர்புகொண்டு தீர்மானங்களை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போதைய கனமழை வானிலை நீங்கினால், நாளை அந்தப் பாடசாலைகளை மீண்டும் திறக்க முடியும் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.