
இலங்கை சுங்கத் தலைமையகக் கட்டிடம் மற்றும் துறைமுக வளாகத்தில் பல நடவடிக்கைகளில் உரிய கொள்முதல் நடைமுறைகளை மீறி கோடிக்கணக்கான பணம் செலுத்தப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்ட சமீபத்திய அறிக்கை வெளிப்படுத்துகிறது. இலங்கை சுங்கத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள இந்த கணக்காய்வு அறிக்கையின்படி, துறைமுக வளாகத்தில் கடமையாற்றும் சுங்க அதிகாரிகளின் பகல் மற்றும் இரவு உணவு விநியோகத்திற்காக கடந்த ஆண்டு உரிய கொள்முதல் செயல்முறைக்கு அப்பால் நான்கு கோடியே பதினொரு இலட்சத்திற்கும் அதிகமான ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், இலங்கை சுங்கத் தலைமையகக் கட்டிடத்தில் உள்ள சிற்றுண்டிச்சாலையை நடத்துவதிலும் முறையான கொள்முதல் நடைமுறை பின்பற்றப்படவில்லை என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தரப்பினருடன் எந்தவொரு செல்லுபடியான ஒப்பந்தமும் செய்யப்படவில்லை என்றும், 2024 பெப்ரவரி 14 ஆம் திகதி முதல் இன்று வரை அந்த சிற்றுண்டிச்சாலை இந்த முறைசாரா வழியிலேயே நடத்தப்பட்டு வருவதாகவும் கணக்காய்வு அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன், வாகன அனுமதிப்பத்திரங்கள் தொடர்பான கணக்காய்வு அலுவலகத்தால் அனுப்பப்பட்ட கணக்காய்வு கேள்விக்கு பதிலளிப்பதை சுங்கப் பணிப்பாளர் நாயகம் கிட்டத்தட்ட ஆறு மாதங்களாகத் தவிர்த்து வருவதாகவும் அந்த அறிக்கை மேலும் குறிப்பிடுகிறது.