
தலவத்துகொட பிரதேசத்தில் அமைந்துள்ள வெளிநாட்டு சுற்றுலா முகவர் நிறுவனமொன்றில் புகுந்து அதன் உரிமையாளர் உட்பட பலரை மண்டியிட வைத்து, சுமார் எட்டு கோடி ரூபா பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையிட்ட சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி மேல் மாகாண தெற்கு குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த முதலாம் திகதி மாலை 6.00 மணியளவில் முகமூடி அணிந்த கூரிய ஆயுதங்களுடன் வந்த மூவர் கொண்ட குழுவொன்று குறித்த நிறுவனத்திற்குள் நுழைந்து மூன்று நிமிடங்களுக்குள் இந்த சொத்துக்களை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளது.
தலங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இந்த சிக்கலான குற்றத்தின் முழுமையான விசாரணைகள் மேல் மாகாண தெற்குப் பொறுப்பதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் சமந்த விஜேசேகரவின் உத்தரவின் பேரில் குற்றப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டன.முல்லேரியா வைத்தியசாலை வீதி விளையாட்டு மைதானத்திற்கு அருகில் சுமார் நான்கு வருடங்களாக வாடகை அடிப்படையில் வசித்து வந்த இந்த திட்டமிட்டவர், கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஹபரண பிரதேசத்தில் பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இதற்கு முன்னர் குறித்த நிறுவனத்தில் துணை முகவராக பணிபுரிந்துள்ளார் என்பதுடன், அவர் அதிக கடன் சுமையில் இருந்தவர். நிறுவன உரிமையாளருக்கு ஒரு கோடியே ஐம்பது இலட்சம் ரூபா செலுத்த வேண்டியிருந்த நிலையில், முல்லேரியா பிரதேசத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் இந்த கடன் தொகையை செலுத்தாமல் தவிர்த்தமைக்காக உரிமையாளர் சந்தேகநபரை பகிரங்கமாக திட்டியுள்ளார். இதனால் ஏற்பட்ட கடுமையான அவமானமும், வெறுப்பும் காரணமாக ஒரு மாதத்திற்கு முன்னர் அவர் இந்த கொள்ளையை திட்டமிட்டுள்ளார்.
இந்த திட்டத்திற்காக சந்தேகநபர் நவகமுவ பொலிஸில் முன்னாள் சிவில் ஊழியராக இருந்த பிலியந்தலை சித்தமுல்லையைச் சேர்ந்த ஒருவரின் உதவியைப் பெற்றுள்ளார். அவர் மூலம் பொமிரிய பிரதேசத்தைச் சேர்ந்த மேலும் இருவரை தொடர்புபடுத்தியுள்ளார். கொள்ளை நடந்த அன்று காலை சித்தமுல்லையில் உள்ள வீட்டில் சந்தித்த இவர்கள், ஹங்வெல்லையில் உள்ள நிதி நிறுவன ஊழியர் ஒருவரிடம் வாடகைக்கு பெற்ற மோட்டார் வாகனத்திற்கு போலி இலக்கத் தகடுகளை பொருத்தி இந்த குற்றத்திற்காக புறப்பட்டுள்ளனர். இதற்கு முன்னர் முல்லேரியா உடுமுல்லையில் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளை திருடி அதைப் பயன்படுத்த திட்டமிட்டிருந்தாலும், பின்னர் அதை மாற்றி மோட்டார் வாகனத்தைப் பயன்படுத்தியுள்ளனர். கொள்ளை நடந்த நேரத்தில் வாகனத்தின் சாரதியாக இந்த சூத்திரதாரியே செயல்பட்டுள்ளார்.
கொள்ளையிடப்பட்ட ஆறு கோடியே ஐம்பது இலட்சம் ரூபா பணத்தில் இருந்தும், ஒரு கோடியே ஐம்பது இலட்சம் ரூபா பெறுமதியான 30 பவுண் தங்க நகைகளில் இருந்தும் சூத்திரதாரி இரண்டு கோடி ரூபா பணத்தைப் பெற்றுள்ளார். முன்னாள் சிவில் ஊழியருக்கு ஒன்றரை கோடி ரூபா பணத்துடன் தங்க நகைகளும், மற்ற இருவருக்கும் தலா எண்பத்தைந்து இலட்சம் ரூபாவும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. சந்தேகநபர் தனக்கு கிடைத்த பணத்தில் தனது மனைவியின் தோழிக்கு 50 இலட்சம் ரூபாவும், அடகு வைத்த காணியை மீட்க உறவினர் ஒருவருக்கு 13 இலட்சம் ரூபாவும் வழங்கியுள்ளதுடன், முல்லேரியாவில் உள்ள மூன்று பெண்களுக்கு இருந்த 28 இலட்சம் ரூபா கடனையும் அடைத்துள்ளார். பொலிஸார் சந்தேகநபரிடமிருந்து ஒரு கோடியே எண்பத்தைந்து இலட்சம் ரூபா பணம், குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் வாகனம் மற்றும் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளனர்.
சந்தேகநபர் அடையாள அணிவகுப்பிற்காக கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், கொள்ளையுடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்களையும் உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சுற்றிவளைப்பு மேல் மாகாண தெற்குப் பிரிவு குற்றப் பிரிவின் பணிப்பாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜனக பெரேரா மற்றும் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சமிந்த பெரேரா ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில், பதில் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் இசுரு ஷாமிக, உப பொலிஸ் பரிசோதகர் ஷெஹான் பஸ்நாயக்க உள்ளிட்ட பொலிஸ் சார்ஜென்ட்கள் மற்றும் கான்ஸ்டபிள்கள் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.