நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் 26 அன்று ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தில் காணாமல் போன 64 வயதுப் பெண் ஒருவரை, பத்து நாட்களுக்குப் பிறகு இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்க மீட்புப் படையினர் வெற்றி பெற்றுள்ளனர். நுவாகோட் மாவட்டத்தில் உள்ள பெத்ராவதி என்ற பழமையான வர்த்தக நகரில் வசித்து வந்த சந்திகா ஸ்ரேஸ்தா என்ற இந்தப் பெண் உயிருடன் இருப்பார் என்ற நம்பிக்கையை கைவிட்ட அவரது உறவினர்கள், அவருக்காக குசா புல்லால் செய்யப்பட்ட உருவத்தைப் பயன்படுத்தி மத சடங்குகளை கூட செய்திருந்தனர்.
எவ்வாறாயினும், செப்டம்பர் 5 ஆம் தேதி இடிந்து விழுந்த அவரது வீட்டின் இடிபாடுகளில் இருந்து அவரை மீட்க முடிந்தது மிகவும் ஆச்சரியமான நிகழ்வாக மாறியுள்ளது.
நேபாள பேரிடர் இடர் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் மற்றும் 'காத்மண்டு போஸ்ட்' நாளிதழ் அறிக்கையின்படி, சந்திகா ஸ்ரேஸ்தா தனது குடும்பத்தின் மேலும் நான்கு உறுப்பினர்களுடன் ஆகஸ்ட் 26 அன்று வெள்ளத்தில் சிக்கி காணாமல் போயுள்ளார். காணாமல் போன எட்டாவது நாளான செப்டம்பர் 2 ஆம் தேதிக்குள் அவர் இறந்துவிட்டதாக முடிவு செய்த குடும்ப உறவினர்கள், இந்து மதத்தில் சடலங்களைக் கண்டுபிடிக்க முடியாதபோது செய்யப்படும் பாரம்பரிய குசா புல் உருவ இறுதிச் சடங்கை நடத்தினர்.
ஆனால் செப்டம்பர் 5 ஆம் தேதி காலை, சாலை சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த நேபாள ஆயுதப்படை KNPU அதிகாரிகளுக்கு இடிபாடுகளுக்குள் இருந்து மெல்லிய அழுகுரல் கேட்டது. உடனடியாக செயல்பட்ட காவல்துறை மண் மற்றும் சேற்றை அகற்றி, வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்த பிறகு அவரது குரலைத் தெளிவாகக் கேட்டனர். பின்னர் நேபாள ராணுவ ஹெலிகாப்டர் மூலம் அவர் மேலதிக சிகிச்சைக்காக காத்மண்டுவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டார்.
நேபாளத்தில் பரவலாகக் காணப்படும் இந்து மற்றும் பௌத்த கலாச்சார நம்பிக்கைகளின்படி, இறந்த ஒருவரின் உடலைக் கண்டுபிடிக்க முடியாதது அந்த ஆத்மாவின் மோட்சத்திற்கு அல்லது அமைதிக்கு ஒரு தடையாகக் கருதப்படுகிறது. எனவே, மரணம் உறுதியானது என்று நம்பப்பட்டாலும், உடல் கண்டுபிடிக்க முடியாத சந்தர்ப்பங்களில், சடலத்தை அடையாளப்படுத்தும் வகையில் குசா புல்லால் உருவங்களை உருவாக்கி தகன சடங்குகளை செய்வது வழக்கம். பல உயிர்களைப் பலிகொண்ட இந்த வெள்ளப் பேரழிவுக்குப் பிறகு, நேபாளத்தில் உள்ள கோவில்கள் மற்றும் புனித இடங்கள் இத்தகைய உருவ இறுதிச் சடங்குகளை நடத்த வரும் குடும்பங்களால் நிரம்பி வழிகின்றன. செப்டம்பர் 5 ஆம் தேதி நிலவரப்படி, நேபாள வெள்ளத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,375 ஆக உயர்ந்திருந்தது, மேலும் 5,500 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.