சாதாரண தரப் பாடங்களை 7 ஆக மாற்றுவதற்குத் தயாராக

preparations-to-change-ordinary-level-to-7-subjects

2027 ஆம் ஆண்டு முதல் அமுல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய பொதுக் கல்வி மற்றும் முன்பள்ளி கல்வி சீர்திருத்தங்களின் தற்போதைய முன்னேற்றத்தை ஆராயும் கலந்துரையாடல் ஒன்று பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. பிரதமர் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர் கலாநிதி ஹரினி அமரசூரிய அம்மையாரின் தலைமையில் கூடிய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான உப குழுவில் இக்கருத்துக்கள் விசேட கவனத்திற்கு உள்ளாயின.




புதிய அடிப்படையின் கீழ் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்காக வரலாறு மற்றும் அழகியல் பாடங்களையும் உள்ளடக்கி மொத்தம் ஏழு பாடங்களை உள்ளடக்க திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன், 10 மற்றும் 11 ஆம் தரங்களுக்கான தொழில் கல்வியை அறிமுகப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், 12 மற்றும் 13 ஆம் தரங்களுக்காக சமூக நல்லிணக்கம், சட்டம் மற்றும் ஒழுக்கம் தொடர்பான தொகுதிகளை (modules) உள்ளடக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொதுக் கல்விச் சீர்திருத்தங்களின் முதல் கட்டமாக 2 மற்றும் 6 ஆம் தரங்களுக்குத் தேவையான தொகுதிகள் (modules), செயற்பாட்டுப் புத்தகங்கள் மற்றும் ஆசிரியர் வழிகாட்டிகளைத் தயாரிக்கும் பணிகள் ஏற்கனவே நிறைவு செய்யப்பட்டுள்ளன. அதனுடன் தொடர்புடைய ஆசிரியர் பயிற்சித் திட்டங்கள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளன. மேலும், இந்த புதிய கல்வி மாற்றங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விசேட நிகழ்ச்சித் தொடர் ஒன்றும் எதிர்காலத்தில் நடத்தப்படவுள்ளது.




அத்துடன், நாடு முழுவதும் முன்பள்ளி கல்வியை முறைப்படுத்தும் நோக்குடன் ஒரு தேசிய முன்பள்ளி கல்வி கொள்கை வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, முன்பள்ளிகளை ஒழுங்குபடுத்தி பதிவு செய்தல், பாடத்திட்டங்கள் மற்றும் ஆசிரியர் வழிகாட்டிகளைத் தயாரித்தல் அத்துடன் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சித் திட்டங்களும் தற்போது நடைபெற்று வருவதாக அங்கு தெரியவந்தது.

Post a Comment

Previous Post Next Post