
பொலன்னறுவை தேசிய சிறுநீரக மருத்துவமனையின் சமையலறையில் ஏற்பட்ட எரிவாயு கசிவு காரணமாக கடந்த 26ஆம் திகதி அதிகாலை 4.30 மணியளவில் ஏற்பட்ட பாரிய வெடிப்பில் காயமடைந்த ஏழு பேரில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த விபத்து ஏற்பட்டவுடன் காயமடைந்த அனைவரும் பொலன்னறுவை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவ்வாறு துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தவர் கல்ஓயா, புதிய தர்மபால வீதிப் பிரதேசத்தைச் சேர்ந்த யூ.ஆர். அசேல சானக விஜேதுங்க என்ற சுகாதாரப் பணியாளர் ஆவார். விபத்தில் காயமடைந்த ஏனைய ஆறு பேரில் ஒரு நோயாளி மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். ஏனையவர்கள் தொடர்ந்து பொலன்னறுவை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் சிக்கியவர்களில் இரண்டு சுகாதாரப் பணியாளர்கள், ஒரு பாதுகாப்பு அதிகாரி, உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த நோயாளி மற்றும் அவரது உதவியாளர், ஒரு துப்புரவுப் பணியாளர் மற்றும் ஒரு மருத்துவமனை சமையல்காரர் ஆகியோர் அடங்குவர்.
திடீர் வெடிப்புடன், மருத்துவமனை ஊழியர்கள் பெரும் முயற்சி எடுத்து, பல வார்டுகளில் சிகிச்சை பெற்று வந்த நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட நோயாளிகளை உடனடியாக மருத்துவமனை கட்டிடத்திற்கு வெளியே கொண்டு சென்று அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த பாரிய சேதத்திற்கு சமையலறையில் ஏற்பட்ட எரிவாயு கசிவே முக்கிய காரணம் என ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்தை பார்வையிடுவதற்காக வீடமைப்பு, நிர்மாண அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் பிரதி அமைச்சர் டி.பி. சரத் அவர்கள் வருகை தந்திருந்ததுடன், மருத்துவமனைக்கு ஏற்பட்ட பாரிய சொத்து சேதத்தை விரைவாக சீர்செய்து வழமைக்கு கொண்டு வரப்படும் என ஊடகங்களுக்கு தெரிவித்தார். அத்துடன், சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அவர்களும் மருத்துவமனைக்கு வருகை தந்ததுடன், உயிரிழந்த ஊழியருக்காக அரசாங்கத்தின் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்தார். உயிரிழந்தவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு நஷ்டஈடு வழங்குவதுடன், காயமடைந்தவர்களின் குடும்பங்களின் எதிர்கால நலன்புரி நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். இந்த துயர சம்பவம் குறித்து உடனடியாக முறையான விசாரணையை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறும், மருத்துவமனையின் இயல்பு நிலையை விரைவாக மீட்டெடுக்குமாறும் சுகாதார அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மேலும் அறிவுறுத்தியுள்ளார்.