இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் ஃபக்வாராவில் உள்ள லவ்லி புரொபஷனல் பல்கலைக்கழகத்தில் (LPU) மாணவி ஒருவருக்கு நடந்ததாகக் கூறப்படும் பாலியல் வன்கொடுமை தொடர்பாக பல்கலைக்கழக வளாகத்தில் பெரும் போராட்டம் வெடித்துள்ளது. செப்டம்பர் 24 அன்று பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த மாணவி ஒருவரை வெளியாட்கள் பாலியல் பலாத்காரம் செய்ததாக சமூக ஊடகங்களிலும் மாணவர்களிடையேயும் பரவிய வதந்திகளே இந்த அமைதியின்மைக்குக் காரணம்.
நேற்று அதிகாலையில் தொடங்கிய இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர், அவர்கள் தேசிய நெடுஞ்சாலையையும் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த அமைதியின்மையின் போது, போராட்டக்காரர்கள் சொத்துக்களை சேதப்படுத்தியும், தீ வைத்தும் வன்முறையில் ஈடுபட்டனர். NDTV அறிக்கையின்படி, இந்திய விமானப்படைக்கு சொந்தமான MiG-23UM விமானத்தின் மீது ஒரு மாணவர் ஏறி நிற்பதும், மேலும் 10 மாணவர்கள் ராணுவ டாங்கின் மீது நிற்பதும் போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. மேலும், பல்கலைக்கழக கட்டிடத்தின் சில பகுதிகள் தீப்பிடித்து எரிவதும், கண்ணாடி ஜன்னல்கள் மற்றும் பூந்தொட்டிகள் உடைக்கப்பட்டிருப்பதும், வளாகத்தில் உள்ள சில கடைகள் சேதமடைந்திருப்பதும் வீடியோ காட்சிகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த சொத்து சேதங்களுக்கு வெளியாட்கள் தொடர்பு இருப்பதாக மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கபூர்தலாவின் மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் கௌரவ் டூரா கருத்துப்படி, இந்த பாலியல் பலாத்கார குற்றச்சாட்டை உறுதிப்படுத்த இதுவரை எந்த ஆதாரமும் காவல்துறையினருக்கு கிடைக்கவில்லை. இருப்பினும், அறியப்படாத ஒரு நபருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவத்தை விசாரிக்க ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவும் (SIT) நியமிக்கப்பட்டுள்ளது. ஜலந்தர் மண்டல துணை காவல்துறைத் தலைவர் நவீன் சிங்லா, மூன்று நாட்களுக்கு முன்பு G3 விடுதியில் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், அது தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதுதான் போராட்டக்காரர்களின் முக்கிய குற்றச்சாட்டு என்றும் தெரிவித்துள்ளார். அதன்படி, காவல்துறையினர் மாணவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்து முதல் தகவல் அறிக்கையை (FIR) பதிவு செய்யத் தொடங்கியுள்ளனர். இரவு 1 மணியளவில் பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதிக்கு அருகில் இந்த அமைதியின்மை தொடங்கியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்ட சில மாணவர்கள், சம்பந்தப்பட்ட மாணவிக்கு ஒரு பிளம்பர் அல்லது கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள ஒரு ஊழியரால் இந்த வன்கொடுமை நடந்ததாகக் கூறுகின்றனர். இது குறித்து விடுதி வார்டனிடம் தெரிவிக்கப்பட்ட போதிலும், அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் மாணவர்கள் மேலும் குற்றம் சாட்டுகின்றனர்.