அரச காகிதக் கூட்டுத்தாபனத்தின் தலைவரை அழைத்து வரச் சென்ற அவரது உத்தியோகபூர்வ சாரதி, தலைவருக்குச் சொந்தமான கார் வண்டியுடன் காணாமல் போயுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
கொழும்பு 06, ஸ்டாபோர்ட் வீதியில் அமைந்துள்ள கூட்டுத்தாபனத்தின் பிரதான அலுவலகத்திலிருந்து கடந்த 21ஆம் திகதி கடவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள தலைவரின் வீட்டிற்கு, தலைவரை அலுவலகத்திற்கு அழைத்து வரும் நோக்குடன் குறித்த சாரதி புறப்பட்டுள்ளார். இருப்பினும், குறித்த நேரத்தில் வாகனம் வீட்டிற்கு வராததால், தலைவர் சாரதியின் தொலைபேசிக்கு அழைத்து விசாரித்துள்ளார். அப்போது, வாகனத்தில் எரிபொருள் கசிவு இருப்பதாக சாரதி தலைவரிடம் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர், கடவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள வாகன திருத்தும் நிலையத்திற்கு வாகனத்தை அனுப்புமாறு தலைவர் அறிவுறுத்தியுள்ளார். சாரதி அந்த இடத்திற்குச் சென்று பரிசோதனை செய்துள்ளார். ஆனால், குறித்த கார் வண்டியில் எந்தவித கோளாறும் இல்லை என அங்கிருந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவித்ததாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அன்றைய தினம் மாலை 4.00 மணி வரை சாரதி மீண்டும் அலுவலகத்திற்கு வரவில்லை. பின்னர் அவரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்தபோது, தொலைபேசி அணைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த காணாமல் போன சம்பவம் தொடர்பாக காகிதக் கூட்டுத்தாபனத்தின் போக்குவரத்து முகாமையாளர் சமன் பிரியங்கர பெர்னாண்டோ வெள்ளவத்தை பொலிஸாருக்கு முறைப்பாடு அளித்துள்ளார்.
இவ்வாறு காணாமல் போனவர் ராகம, கெந்தலியத்தபாலுவ பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய சாரதியாவார்.
சம்பவம் தொடர்பில் தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகள் மற்றும் சிசிடிவி (CCTV) காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு, வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் மோகன் சில்வா அவர்களின் வழிகாட்டலின் கீழ், பல்வேறு முறைப்பாடுகள் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் வி. கணேவத்த உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் பல கோணங்களில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.