இங்கினியாகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெத்சிரிகம கிராமத்தில் ஒரு காட்டு யானையின் தாக்குதலால் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணும் ஒரு ஆணும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இங்கினியாகல பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த எதிர்பாராத சம்பவம் கடந்த 23ஆம் திகதி அதிகாலை 6.30க்கும் 7.00க்கும் இடைப்பட்ட நேரத்தில் பதிவாகியுள்ளது.
வனவிலங்கு அதிகாரிகள் குறிப்பிடும் வகையில், குறித்த காட்டு யானை இரவு நேரத்தில் கல்ஓயா தேசிய வனப்பூங்காவில் இருந்து கிராமத்திற்குள் நுழைந்துள்ளது. பின்னர் கெத்சிரிகம கீழ் வயல்வெளிக்கு அருகில் இருந்த ஒரு காட்டுப் புதரில் மறைந்திருந்த இந்த காட்டு யானையை விரட்டுவதற்காக பிரதேசவாசிகள் யானை வெடிகளைப் பற்ற வைத்துள்ளனர்.
அவ்வாறு விரட்டப்படும் போது பீதியடைந்த யானை கால்வாயைக் கடந்து, கெத்சிரிகம கிராமத்தின் ஊடாக எக்லகல்ஓயா வனப்பாதுகாப்புப் பகுதியை நோக்கி தப்பிச் சென்றுள்ளது. அவ்வாறு செல்லும் வழியில் துணைச் சாலையில் இரண்டு இடங்களில் சந்தித்த குறித்த பெண்ணையும் ஆணையும் காட்டு யானை தாக்கியுள்ளது.
தாக்குதலில் காயமடைந்த கெத்சிரிகம பிரதேசவாசிகள் இருவரும் பிரதேசவாசிகளால் உடனடியாக தமன வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அவர்கள் அம்பாறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். வைத்தியசாலை வட்டாரங்களின்படி அவர்களின் நிலைமை கவலைக்கிடமானதல்ல என்றாலும், தாக்குதலுக்குள்ளான ஆணின் ஒரு காலுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.