பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு 70 மில்லியன் ரூபாயை இலஞ்சமாக வழங்கிய குற்றச்சாட்டு தொடர்பில், கிரிஷ் தனியார் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளரான ஜானகி சிறிவர்தனவை இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு கைது செய்துள்ளது. நகர அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள ட்ரான்ஸ்வொர்க் சதுக்க காணியை குறித்த நிறுவனத்திற்கு விரைவாகப் பெற்றுக்கொடுப்பதற்கு வசதி செய்துகொடுப்பதற்காக இந்த பணம் மூன்று சந்தர்ப்பங்களில் இலஞ்சமாக செலுத்தப்பட்டதாக அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
சந்தேகநபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.ஜானகி வரக்காகொட என்றும் அழைக்கப்படும் இவர், பாரிய நிதி மோசடி குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான திலினி பிரியமாலியின் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என 2022 ஆம் ஆண்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டார். கோட்டை கிரிஷ் கட்டிடத்தில் அமைந்துள்ள அலுவலகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட இந்த கைது, காலி முகத்திடல் பகுதியில் கட்டப்படவிருந்த நாட்டின் மிக உயரமான கட்டிடத்தின் வர்த்தக மற்றும் குடியிருப்பு அலகுகளை விற்பனை செய்வதாகக் கூறி வர்த்தகர்களிடமிருந்து முற்பணம் பெற்றுக்கொண்டு மேற்கொள்ளப்பட்ட மோசடி விசாரணைகளின் ஒரு பகுதியாகும். திலினி பிரியமாலியின் பல நிதி பரிவர்த்தனைகள் ஜானகி சிறிவர்தனவுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டதாக அரசியல்வாதி ஆசாத் சாலி அப்போதே தகவல்களை வெளியிட்டிருந்தார்.
கிரிஷ் காணி ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பமானதையடுத்து, ஜானகி சிறிவர்தனவின் பெயர் ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டது. இந்த விசாரணைகளின் போது, பான் ஏசியா வங்கியின் முன்னாள் தலைவர் நிமல் பெரேரா, நீதவான் முன்னிலையில் அளித்த வாக்குமூலத்தில், நாமல் ராஜபக்ஷவுக்கும் ஜானகி சிறிவர்தனவுக்கும் இடையிலான உறவுகள் குறித்த பல தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டன. இந்தியாவின் மகாதேவன் நிறுவனம் அல்லது கிரிஷ் லங்கா நிறுவனத்தின் தாய் நிறுவனத்தின் முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடு செய்ய அழைத்து வந்த முக்கிய ஒருங்கிணைப்பாளராகவும் அவர் செயல்பட்டுள்ளார்.
இலங்கையில் ரக்பி விளையாட்டை மேம்படுத்துவதற்கான அனுசரணை என்று கூறி, கிரிஷ் வர்த்தகர்கள் 70 மில்லியன் ரூபாயை இந்த காணி ஒப்பந்தத்திற்கு முன்னதாகவே பரிமாறிக்கொண்டனர். கொழும்பு கோட்டை ட்ரான்ஸ்வொர்க் சதுக்க காணியைத் தவிர, அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அருகில் ஒரு திட்டத்தைப் பெறுவதற்கும், கற்பிட்டி பிரதேசத்தில் முப்பது ஏக்கர் காணியை வாங்குவதற்கும் ராஜபக்ஷக்களுடன் ஒருங்கிணைந்து பெரிய கமிஷன் தொகைகளை பரிமாறிக்கொள்ள அவர் தலையிட்டதாக பல்வேறு அறிக்கைகள் வெளியாகின.
இது தவிர, நல்லாட்சி அரசாங்கத்தின் போது இந்திய கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியை இலங்கைக்கு அழைத்து வந்து அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஒரு கலந்துரையாடலை ஏற்பாடு செய்யவும் அவர் நடவடிக்கை எடுத்திருந்தார்.