
இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக கருணாரத்னவிடம் இருந்து டி.என்.ஏ பரிசோதனைக்காக இரத்த மாதிரி பெறுமாறு கோரிய விண்ணப்பத்தை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்தமைக்கு எதிராக, முறைப்பாட்டாளரான விமானி கொழும்பு சிவில் மேன்முறையீட்டு உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளார்.
ரசிகா செவ்வந்தி என்ற இந்த முறைப்பாட்டாளர், தனது குழந்தையின் தந்தை சாமிக கருணாரத்ன என்று குறிப்பிட்டு பிறப்புச் சான்றிதழை வழங்குமாறு பதிவாளர் நாயகத்திற்கு உத்தரவு பெறுவதற்காக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். குழந்தையின் தந்தைத்துவம் தொடர்பான இந்த நெருக்கடியான சூழ்நிலையில், தந்தைத்துவத்தை உறுதிப்படுத்த சம்பந்தப்பட்ட வீரரின் இரத்த மாதிரியைப் பெற்று டி.என்.ஏ பகுப்பாய்வு செய்யுமாறு உத்தரவிடுமாறும் அவர் நீதிமன்றத்திடம் கோரினார்.
எவ்வாறாயினும், கோரப்பட்ட நிவாரணத்தை வழங்குவதற்கும், டி.என்.ஏ பரிசோதனைக்காக இரத்த மாதிரியைப் பெறுவதற்கும் போதுமான அல்லது நியாயமான அடிப்படையை முன்வைக்க முறைப்பாட்டாளர் தரப்பு தவறிவிட்டதாகக் கூறி, கொழும்பு மாவட்ட நீதிபதி லலித் கன்னங்கர கடந்த ஆகஸ்ட் 4 ஆம் திகதி அந்த விண்ணப்பத்தை முழுமையாக நிராகரிக்க நடவடிக்கை எடுத்தார்.
சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணையின் போது, முறைப்பாட்டாளர் ரசிகா செவ்வந்தி சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஷ ஆஜரானார். ராம்சி பாச்சா அசோசியேட்ஸ் நிறுவனத்தின் அறிவுறுத்தலின் பேரில், சாமிக கருணாரத்ன சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான ஜகத் விக்ரமநாயக்க மற்றும் நிர்மலா குணதிலக்க ஆகியோர் ஆஜராகினர்.
டி.என்.ஏ பரிசோதனைக்கான கோரிக்கை நிராகரிக்கப்பட்ட போதிலும், மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள இந்த வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காக அது மீண்டும் எதிர்வரும் அக்டோபர் 9 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.