நேபாளம் மற்றும் திபெத்தை கடுமையாகப் பாதித்த பெரும் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போனவர்களில் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஒரு ஆஸ்திரேலிய குடும்பத்தின் நான்கு உறுப்பினர்களும் அடங்குவதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள மிகவும் புனிதமான கைலாஷ்-மானசரோவர் யாத்திரையில் பங்கேற்றபோது இவர்கள் இவ்வாறு ஆபத்தை எதிர்கொண்டனர்.
இவ்வாறு காணாமல் போனவர்கள் சிட்னியில் வசித்து வந்த 47 வயதுடைய சந்திரசேகரன் முரளிதரன், அவரது 42 வயதுடைய மனைவி ஷைலஜா முரளிதரன் மற்றும் அவர்களது மகன்களான 14 வயதுடைய அஸ்வின், 11 வயதுடைய ஆருஷ் ஆகிய இருவர் ஆவர். யாழ்ப்பாணத்தின் கோப்பாய் பிரதேசத்தில் பிறந்து பின்னர் ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்த சந்திரசேகரன் அவர்களின் இரண்டு குழந்தைகளும் ஆஸ்திரேலியாவில் பிறந்தவர்கள்.
'ஹிமாலயன் கிளேசியர் அட்வென்ச்சர்ஸ்' நிறுவனம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட இந்திய யாத்திரைக் குழுவில் இணைந்து சந்திரசேகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் நேபாளத்தில் உள்ள 'கைலாஷ் கூட்' மலையை தரிசிக்கச் சென்று கொண்டிருந்தனர். மேலும் 15 இந்தியர்களைக் கொண்ட இந்த குழு நேபாள-சீன எல்லையை அண்மித்த 'ரசுவாகாதி' பிரதேசத்தில் இந்த துயரத்திற்கு ஆளாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதுவரை காணாமல் போன குடும்ப உறுப்பினர்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை என ஆஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர், ஒட்டுமொத்தமாக இந்த வெள்ளத்தில் சிக்கிய ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 43 ஆகும். நேபாளம் மற்றும் திபெத் முழுவதும் பரவிய இந்த பெரும் இயற்கை அனர்த்தத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,000ஐ தாண்டிவிட்டதுடன் மேலும் 4,000க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர் என வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.