களுபோவில வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள வீட்டிற்குள் இரவு நேரத்தில் பலவந்தமாக நுழைந்து குடியிருப்பாளர்களைத் துன்புறுத்திய குழு தொடர்பில் முறையான விசாரணைகளை நடத்தி, சம்பந்தப்பட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தெஹிவளை கல்கிஸ்ஸ மாநகர சபையின் முன்னாள் நகர சபை உறுப்பினர் நிமல் புலத்சிங்கல பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த 01ஆம் திகதி இரவு 9.00 மணியளவில் மோட்டார் வாகனம் மற்றும் பிற வழிகளில் வந்த 15 பேர் கொண்ட குழுவொன்று களுபோவில வைத்தியசாலை வீதியில் உள்ள இலக்கம் 161 கொண்ட வீட்டிற்குள் நுழைந்துள்ளது.
தங்களை நிதி அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு அங்கு இருந்தவர்களை வெளியே இழுத்துச் சென்று செய்த இந்த தொல்லைகள் குறித்து இதுவரை கொஹுவளை பொலிஸில் 07 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாடுகளில் ஒன்று தொடர்பில் மட்டுமே பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும், அனைத்து முறைப்பாடுகளையும் கருத்தில் கொண்டால், வந்த சந்தேகநபர்களை அடையாளம் காண முடிந்திருக்கும் என உறுப்பினர் சுட்டிக்காட்டுகிறார். எந்தவொரு நீதிமன்ற உத்தரவும் இன்றி வந்த இந்த நபர்கள் யார் என்பது உறுதிப்படுத்தப்படாததால், வாடகை அடிப்படையில் அந்தக் கட்டிடத்தில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். மேலும், சந்தேகநபர்கள் வந்த வாகனம் தீ வைத்து எரிக்கப்பட்டதாக பரவும் செய்தியுடன், சம்பவம் நடந்த விதம் மற்றும் இடம் குறித்து பல கேள்விகள் எழுவதாகவும் அவர் மேலும் கூறுகிறார்.
கொஹுவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விசாரணைகளுக்கு ஆதரவளித்தாலும், அவருக்குக் கீழ் உள்ள மற்றொரு அதிகாரி விசாரணை நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்வதாக சந்தேகம் நிலவுவதால், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கல்கிஸ்ஸ சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து வினவியபோது, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜனக குமார தெரிவித்ததாவது, சம்பந்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறினார்.