
பெண்களின் வயதிற்கேற்ப அவர்கள் எதிர்கொள்ளும் மார்பகப் புற்றுநோய் அபாயம் குறித்து சுகாதார ஆலோசனைகளை வழங்குவது மிகவும் முக்கியம் என அண்மைய ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. லண்டன் இம்பீரியல் கல்லூரியின் (Imperial College London) நிபுணர்கள், வெவ்வேறு வயதுப் பிரிவுகளில் பெண்களின் வாழ்க்கை முறைப் பழக்கவழக்கங்கள் மாறுபடுவதால், அந்த மாற்றக் காலங்களை இலக்காகக் கொண்டு ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று சுட்டிக்காட்டுகின்றனர்.இந்த ஆய்விற்காக 'Breast Cancer Now Generations Study' இன் கீழ் 110,000 க்கும் மேற்பட்ட பெண்களின் தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. இதில் அவர்களின் புகைபிடித்தல், மது அருந்துதல், உடற்பயிற்சி மற்றும் உடல் எடை போன்ற காரணிகள் வயதுக்கு ஏற்ப எவ்வாறு மாறுகின்றன என்பது விரிவாகக் கவனிக்கப்பட்டுள்ளது.
ஆய்வுத் தரவுகளின்படி, 30 வயதிற்குட்பட்ட பெண்கள் ஒரு நாளைக்கு ஒரு கிளாஸ் ஒயின் அருந்தினால் கூட, அவர்களின் மார்பகப் புற்றுநோய் அபாயம் சுமார் 15 சதவீதம் அதிகரிக்கலாம். மேலும், நடுத்தர வயதுப் பெண்களைப் பாதிக்கும் முக்கிய ஆபத்துக் காரணி தேவையற்ற உடல் எடை அதிகரிப்பு ஆகும். 20 வயதிற்குட்பட்ட பெண்கள் அதிகமாக மது அருந்த முனைகிறார்கள் என்றாலும், 30 வயதிற்குட்பட்ட பெண்கள் மது மற்றும் அதிக எடை ஆகிய இரண்டு காரணிகளின் தாக்கத்திற்கும் ஒரே நேரத்தில் உள்ளாவதால், அவர்கள் அதிக ஆபத்தை எதிர்கொள்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளில் 20 முதல் 49 வயதுக்குட்பட்ட பெண்களிடையே மார்பகப் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை சுமார் 10 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், வயதுக்கு ஏற்ப விழிப்புணர்வை ஏற்படுத்துவது கட்டாயத் தேவையாக மாறியுள்ளது.
மொத்த மார்பகப் புற்றுநோயாளிகளில் சுமார் கால் பகுதியினர், அதாவது 25 சதவீதம் பேர், ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் மூலம் தவிர்க்கப்படலாம் என்று நம்பப்படுகிறது. உடலில் கொழுப்பு செல்கள் அதிகரிக்கும்போது ஈஸ்ட்ரோஜன் (oestrogen) ஹார்மோன் அளவு அதிகரிக்கிறது, இது மார்பகப் புற்றுநோய் அபாயத்தை நேரடியாக அதிகரிக்கிறது. 'Scientific Reports' இதழில் வெளியான அறிக்கைகளின்படி, மாதவிடாய் நின்ற (post-menopausal) பருமனான பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான ஆபத்து சாதாரண எடையுள்ள பெண்களை விட 30 சதவீதம் அதிகமாகும். புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் ஏமி பெர்ரிங்டன் (Amy Berrington) குறிப்பிட்ட வயதுகளில் மது தொடர்பான அபாயங்கள் குறித்து பெண்களுக்கு எச்சரிக்கை விடுப்பதன் மூலம் நீரிழிவு மற்றும் இருதய நோய்கள் போன்ற பிற நோய்களையும் தடுக்க முடியும் என்று குறிப்பிடுகிறார்.
இதற்கிடையில், மார்பகப் புற்றுநோயாளிகளுக்கு ஆறு மாதங்கள் கூடுதல் ஆயுளை வழங்கக்கூடிய ஒரு புதிய மருந்து, இரண்டு வருட தொடர்ச்சியான போராட்டத்திற்குப் பிறகு பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவை (NHS) ஆல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இங்கிலாந்தில் ஆண்டுக்கு 1,000 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு 'Enhertu' எனப்படும் இந்த புதிய மருந்து வழங்கப்பட உள்ளது. இதற்கு முன்னர் அதிகாரிகள் இந்த மருந்துக்கான செலவுக்கு ஈடான மதிப்பு இல்லை என்று தீர்மானித்திருந்தாலும், புதிய ஒப்புதலுடன் இது மார்பகப் புற்றுநோய் தடுப்பு இயக்கத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என்று 'Breast Cancer Now' தொண்டு நிறுவனத்தின் கிளேர் ராவ்னி (Claire Rowney) தெரிவித்துள்ளார்.
(டெய்லி மெயில் ஆதாரத்துடன்)
